”ஒத்துழையாமை இயக்கப் போராளி சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்!” – என்று பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி சிங்காரவேலரின் பிறந்தநாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலைதளத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சிங்காரவேலர் 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று ஏராளமான மொழிகளை கற்றறிந்தவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது தொழிலை மேற்கொண்ட சிங்காரவேலர் பிரிட்டிஷ் அடக்குமுறையை எதிர்த்து 1921 ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தினால் தனது வழக்கறிஞர் தொழிலை புறக்கணித்தார். மகாகவி பாரதியை ஆதரித்து இந்திய விடுதலைப் போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றார். ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்தினார். தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்க இயக்கங்களையும் கட்டமைத்தார். மயிலாப்பூர் கடற்கரை எதிரே இருந்த இவரது குடியிருப்பை வெலிங்டன் பிரபு கைப்பற்றி அதற்கு லேடி வெலிங்டன் என பெயர் சூட்டிக்கொண்டதும் நடந்தது. சிங்காரவேலர் 1946ல் மறைந்தார்.
சிங்காரவேலர் பிறந்தநாளில் தமிழக மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நினைவாஞ்சலியில் கூறியுள்ளதாவது:-
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரியாதை இயக்கச் சுடரொளி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி, இதழாசிரியர், எழுத்தாளர், சென்னை மாநகராட்சி உறுப்பினர் என பல நிலைகளில் இருந்து பாட்டாளி மக்களுக்காகவும் இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள்!
தாம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது குடிஅரசு இதழுக்கு வழிகாட்டுமாறு தந்தை பெரியார் கேட்டுக்கொண்டதும் சிங்காரவேலரைத்தான்! “போர்க்குணம் மிகுந்த நல் செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!” எனத் திராவிடப் புரட்சிக்கவி பாரதிதாசனார் போற்றியதும் அவரைத்தான்! தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.