நடிகரும், தவெக தலைவருமான விஜய் சொந்தமாக சிபிஎஸ்சி பள்ளியை நடத்தி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுகிறது என்று கூறி திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஆனாம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியை திணிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியாக கட்டாயம் இந்தி கற்க வேண்டும் என்று பரிந்துரை தரப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி அதை மாற்றி மூன்றாவது மொழி ஏதேனும் ஒரு இந்திய மொழி என்ற வாய்ப்பை கொண்டு வந்தார்.
ஆனால் ஆளுங்கட்சியில் அமைச்சர்களாக உள்ளவர்கள், மூன்றாவது மொழி என்றால் இந்தி என்று கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிகம். சிபிஎஸ்சி மாணவர்கள் இந்தி படிக்கின்றனர். மெட்ரிக் சிலபஸில் தெலுங்கு, மலையாளம், இந்தி, பிரஞ்சு, உருது, கன்னடம் உள்ளிட்ட மொழி வாய்ப்புகள் உள்ளது. அரசுப்பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சந்தை 30 ஆயிரம் கோடியாக உள்ளது. தமிழ் பயிற்று மொழி, ஆங்கிலம் கட்டாய பாட மொழி, விருப்ப மொழியாக இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் என சீமானே தனது தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார். புதிய கல்விக் கொள்கையும் அதைத்தான் சொல்கிறது.
அண்ணன் விஜய் அவர்கள் ‘விஜய் வித்யாஷ்ரம்’ என்ற பெயரில் தனியார் சிபிஎஸ்சி பள்ளியை நடத்தி வருகிறார். சி.ஜோசப் விஜய் என்பவர் யார்?, அவர் புதியதாக மேலே இருந்து வந்தாரா?; அவரது இடத்தை 35 ஆண்டுகளுக்கு ஒரு அறக்கட்டளைக்கு லீஸ் கொடுத்து உள்ளார். அந்த அறக்கட்டளை எஸ்.ஏ.சந்திரசேகரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர் நடத்தக் கூடிய பள்ளிதான் விஜய் வித்யாஸ்ரம்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சொந்த குழந்தை பிரஞ்சு படிக்கிறார். திமுக எம்பி கலாநிதி வீராசாமி சென்னை பப்ளிக் ஸ்கூல் என்ற மெட்ரிக் பள்ளியை நடத்தி வருகிறார். இதில் முதல் மொழியாக ஆங்கிலத்தையும், இரண்டாவது மொழியாக இந்தி, பிரஞ்சு, தமிழ் உள்ளிட்ட வேறு மொழிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளியில் கூட தமிழ் இரண்டாவது மொழி கிடையாது.
30 லட்சம் பேர் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை படிக்கின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசு இது குறித்த புள்ளி விவரங்களை வெளியிட மறுக்கின்றது. நான் சொன்ன எண்ணிக்கைக்கு ஆதாரம் இல்லை என்று அரசு கூறுகிறது. அப்படி என்றால் அரசிடம் உள்ள எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன தயக்கம். மக்களுக்கு உபத்திரம் தர வேண்டும் என்பதற்காக இந்தி கூட்டணி ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். இந்தி வேண்டாம் என்று முடிவு செய்தால் மூன்றாவது மொழியாக வேறு ஏதாவது ஒன்றை படியுங்கள் என்றுதான் சொல்கிறோம். தமிழ்நாட்டில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அரசு பள்ளியை விட அதிகமாக இருக்கும் காரணத்தால் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தோற்றுவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.