60 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என்று பேசமட்டுமே செய்கிறார்கள்: கவர்னர் ஆர்.என். ரவி!

தமிழ் பழமையானது மட்டுமின்றி, சொல் நடையிலும், பேச்சு நடையிலும் ஆங்கிலத்தை காட்டிலும் சிறந்த மொழி என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.

பாரதியார் இலக்கியப் படைப்புகளை தொகுத்த சீனி விஸ்வநாதனுக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு, வானவில் பண்பாட்டு மையம் மையம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசியதாவது:-

பாரதியார் மிகப்பெரிய கவிஞர். சுதந்திர போராட்டத்தில் அவரது பங்கு அபரிமிதமானது. ராஜ்பவனுக்கு நான் முதலில் வந்தபோது, எத்தனையோ தலைவர்கள் சிலை இருந்தது. ஆனால் பாரதியார் சிலை இல்லை. பின்னர் தான் பாரதியார் சிலையை நிறுவினோம். பாரதியாரை நாம் குறைவாகவே கொண்டாடுகிறோம். இது உண்மை.

தமிழ் பழமையானது மட்டுமின்றி, சொல் நடையிலும், பேச்சு நடையிலும் ஆங்கிலத்தை காட்டிலும் சிறந்த மொழி. தாய்மொழி தான் ஒரு மனிதனை கட்டமைக்கிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் தமிழை அடக்கி ஆங்கிலத்தை பிரதானப்படுத்தினார்கள். ஆனாலும் தமிழ் தனது அடையாளத்தை இழக்கவில்லை. ஆனாலும் இந்த பெருமையை நாம் பின்பற்றி தொடருகிறோமா என்பது கேள்விக்குறியே. பாரதியார் போன்ற ஒப்பற்ற தலைவர்களை பேசுவதையே நாம் கூச்சமாக நினைக்கிறோம். சமுதாயம் பெருமனிதர்களின் உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. கம்பர், வால்மீகி போன்றோர் பற்றி பேசுகிறோம். போற்றுகிறோமா?

தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் எந்த வித சேவையும் செய்யப்படாமல் இருக்கிறது. இதுதான் உண்மை. தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் எதுவும் செய்யாதபோதும், தமிழ்நாட்டில் தமிழ்.. தமிழ்.. என்று பேசமட்டுமே செய்கிறார்கள். இது எப்படி நியாயமாகும்? இவ்வாறு அவர் பேசினார்.