பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறை ரத்து செய்யப்படும்: அண்ணாமலை!

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

திருப்பதி ஆஷா அரங்கில் ‘டெம்பிள் கனெக்ட்’ நிறுவனம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டு கடந்த திங்கட்கிழமையன்று மாலை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த மாநாட்டில் 58 நாடுகளில் இருந்து இந்து, சீக்கியம், பவுத்தம் மற்றும் ஜைன மதங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 1581 கோயில்கள் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கோயில் கலாச்சாரம், பண்பாடு, பராமரிப்பு, நிர்வாகம், பக்தர்களின் பங்கேற்பு, அரசுகளின் பங்கேற்பு குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் 2-ம் நாளான நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியதாவது:-

இந்த மாநாடு கடந்த ஆண்டு காசியில் நடைபெற்றது. தற்போது திருப்பதியில் நடைபெறுகிறது. இங்கு வந்திருப்பவர்கள் கோயில்களின் வளர்ச்சியையும் சனாதன தர்மத்தையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வர் எனும் நம்பிக்கை உள்ளது. கடந்த 250 ஆண்டு காலத்தில் நாம் என்ன இழந்தோமோ அவற்றை பெரியோர்களின் ஆலோசனையின் பேரில் மீட்டெடுத்தாக வேண்டும். திருப்பதி ஏழுமலையான் கோயிலின் சந்தை மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 2.5 லட்சம் கோடி இருக்கும். இது சர்வ தேச மற்றும் நம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் மதிப்பை விட அதிகம்.

ஆனால், பல இந்து கோயில்களின் வருமானம், அரசின் இந்து சமய அறநிலைத்துறையால் சீரழிக்கப்பட்டு வருகிறது. பாரத நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த கோயில்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும். அவை தன்னிச்சையாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் பாஜக கூட்டணி அரசு ஆட்சி அமைந்ததும் இந்து சமய அறநிலைத்துறை ரத்து செய்யப்படும். ஏழுமலையானின் அருளாலும், மக்களின் நம்பிக்கையாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி மலர்ந்ததும் தமிழகத்தில் உள்ள 44,121 கோயில்களும் இந்து சமய அறநிலைத்துறையின் பிடியில் இருந்து விடுவிக்கப்படும். கோயில்களுக்கு வரும் வருமானங்களை வைத்து, அப்பகுதியில் கல்வி நிறுவனங்கள், உள் கட்டமைப்பு போன்றவற்றை நிறுவலாம்.

சோழர்களின் காலத்தில் கோயில்கள் பல கட்டப்பட்டன. இவைகள் நம் நாட்டின் கலாச்சாரத்தை, பண்பை ஒன்றிணைப்பதோடு, சனாதன தர்மத்தின் வாழ்வாதாரத்திற்கு அவசியமான ஆன்மீக சகோதரத்துவத்தை புதுப்பிக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.