அமித்ஷாவுக்கு எதிராக பிப்.25-ல் காங்கிரஸ் கறுப்பு கொடி போராட்டம்: செல்வப்பெருந்தகை!

தமிழ்நாட்டுக்கு வரும் 25-ந் தேதி வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 25, 26-ந் தேதி தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கோவையில் பிப்ரவரி 25-ந் தேதி மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கிறார். இதனையடுத்து 26-ந் தேதியன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் 5 மாவட்ட பாஜக அலுவலகங்களை திறந்து வைக்கிறார் அமித்ஷா.

இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்காமல், தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோவையில் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்ட அறிக்கையில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி பேசியும் மற்றும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக கோவையில் சிவராத்திரி விழாவில் பங்கேற்க பிப்ரவரி 25-ல் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக எனது தலைமையில் மாபெரும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.