முல்லைப் பெரியாறு: ஒரு வாரத்துக்குள் தீர்வு காண மேற்பார்வைக் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், தமிழக – கேரள மாநிலங்கள் ஏற்கும்படி ஒரு வாரத்துக்குள் கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும் என்று மேற்பார்வைக் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணையின் மூலமாக கிடைக்கும் நீரை தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட மக்கள் பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த அணை பராமரிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர சிங் அடங்கிய அமர்வு விசாரித்தது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பான வழக்குகளின் பின்னணி குறித்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, மூத்த வக்கீல் சேகர் நாப்தே ஆகியோர் ஆஜராகி முன் வைத்து வாதிட்டனர்.

அப்போது நீதிபதிகள், ‘முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அனைத்து வழக்குகளையும் கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட ஒரே அமர்வு ஏன் விசாரிக்கக்கூடாது?’ என்று கேட்டனர். இந்த யோசனை தமிழ்நாடு, கேரள அரசு தரப்பில் ஏற்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்தே, ‘முல்லைப் பெரியாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு போராடி வருவது வருந்ததக்கது. பராமரிப்புப் பணிக்காக 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்த கேரள அரசு திடீரென அந்த அனுமதியை ரத்து செய்தது’ என்று தெரிவித்தார்.

உடனே நீதிபதிகள், ‘இரு மாநில அரசுகளின் செயல்பாடுகள் பள்ளிக் குழந்தைகள் சண்டையிடுவதை போல உள்ளன. இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட்டு தீர்க்க வேண்டுமா? மத்திய அரசு அமைத்துள்ள மேற்பார்வைக்குழு நடுநிலையாக செயல்படும் என எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்தனர். மேலும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் கேரளத்தை பாதிக்கும் என சிலர் மிகைப்படுத்தி வருவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு மேற்பார்வைக்குழு தீர்வு காணும் கூட்டத்தை ஒரு வாரத்துக்குள் நடத்த வேண்டும். இரு மாநிலங்களும் ஏற்கும்படியாக அந்த தீர்வு இருக்க வேண்டும். தீர்வு காண முடியாத விஷயங்களை அறிக்கையாக சுப்ரீம் கோர்ட்டில் மேற்பார்வைக் குழு தாக்கல் செய்ய வேண்டும். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு தொடர்பான மனுக்கள் அனைத்தும் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் வகையில் கோப்புகளை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்து பட்டியலிட பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிடுகிறோம்’ என்று தெரிவித்தனர்.