தமிழகத்தில் வசிக்கும் பிறமாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்: ஆர்.என். ரவி!

தமிழகத்தில் வசிக்கும் பிறமாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலங்கள் உருவான நாளை கொண்டாடும் நிகழ்வு என்பது கவர்னர் மாளிகையில் மட்டும் நடக்க வேண்டிய நிகழ்வு அல்ல. கல்லூரிகள், பொது இடங்களில் நடக்க வேண்டிய நிகழ்வு. அப்போதுதான் இரு மாநில கலாசாரங்கள், இந்தியாவின் பன்முகத்தன்மையை அனைவராலும் அறிந்து கொள்ள முடியும்.

அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களைச் சேர்ந்த பலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள், தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இம்மாநிலம் குறித்த தகவல்களை நன்கு அறிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களை விடுமுறை தினங்களில் தங்கள் பகுதிக்கு அழைத்து செல்ல வேண்டும். இதன்மூலம் இரு மாநிலத்தவர்களும் தங்களுக்குள் பரஸ்பர பந்தத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த பந்தம் எப்போதும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அருணாசல பிரதேசம், மிசோரம் மாநிலங்களின் கலாசார கலை நிகழ்ச்சி நடந்தது. இதனை கவர்னர் உள்ளிட்டோர் ரசித்து பார்த்தனர்.