திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால் முகவரி இல்லாமல் இருந்திருப்போம்: உதயநிதி

“திராவிட இயக்கம் தான் நம் ஒவ்வொருவருக்கும் முகவரியை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய இயக்கம். திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால், நாம் இன்னும் முகவரி இல்லாமல், கல்வி, வேலைவாய்ப்பற்ற மனிதர்களாக தான் இருந்திருப்போம்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை செனாய் நகர் விங்ஸ் கன்வென்ஷென் சென்டரில் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2,500 பயனாளிகளுக்கு நேற்று (பிப்.20) வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

இன்றைக்கு சில பேர் திராவிட மாடல் என்றால் என்ன? திராவிட மாடல் அரசு என்றால் என்ன? என்று கேட்கின்றார்கள். “இன்னாருக்கு மட்டும் தான் இது” என்பதற்கு எதிராக, எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்வது தான் உண்மையான திராவிட மாடல் அரசு. இந்த இலக்கை நோக்கி தான் நம்முடைய முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை என்று மூன்று விஷயங்களை சொல்வார்கள். உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம். இந்த மூன்று விஷயங்களுக்காகத் தான் நாம் அத்தனை பேரும் பாடுபட்டு, உழைத்துக் கொண்டு வருகின்றோம். இந்த மூன்று விஷயத்தையும், ஒரு மனிதனுக்கு உறுதி செய்வதுதான் தமிழக முதல்வரின் திராவிட மாடல் அரசு. தமிழக முதல்வரின் உத்தரவின்படி, பட்டாக்களை வழங்குவதற்காக வருவாய்த்துறை அமைச்சர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக்குழு எடுத்த நடவடிக்கைகளால் இன்றைக்கு 89 ஆயிரத்து 400 பட்டாக்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, கடந்த வாரம் முதல்வர் அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி, அனைத்து அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் வரவழைத்து, ஆலோசனைகளை வழங்கி ஒரு சிறப்பான, மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். தமிழகம் முழுக்க நகர பகுதிகளில் 86 ஆயிரம் பட்டாக்களை 6 மாத காலத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தான் அந்த செய்தி. இதை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29 ஆயிரத்து 187 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. அதேபோல, மதுரை, நெல்லை போன்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் மட்டும் 57 ஆயிரத்து 84 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட இருக்கிறது. ஏறத்தாழ 63 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்துகின்ற வகையில், 86 ஆயிரம் பட்டாக்களை வழங்க முதல்வர், அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். இது தமிழகத்தின் வரலாற்றில் நிலைத்து இருக்கப் போகின்ற ஒரு நடவடிக்கை என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

திராவிட இயக்கம் தான் நம் ஒவ்வொருவருக்கும் முகவரியை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம். திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால், நாம் இன்னும் முகவரி இல்லாமல், கல்வி, வேலைவாய்ப்பற்ற மனிதர்களாக தான் இருந்திருப்போம். திராவிட இயக்கம் வந்த பிறகு தான், கல்வி, வேலைவாய்ப்பில் தமிழகம் ஒரு தன்னிறைவு நிலையை அடைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

உங்கள் வீட்டுப் பிள்ளைகளை ‘பட்டதாரிகளாக’ ஆக்கிய திராவிட மாடல் அரசு, இன்றைக்கு உங்கள் எல்லோரையும் ‘பட்டா’-தாரர்களாவும் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் பெருமையோடு கூறிக் கொள்ள விரும்புகிறோம். ஏனென்றால், திமுக அரசு பொறுப்பேற்ற இந்த 4 வருடத்தில் மட்டும் இதுவரைக்கும் 12 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு பட்டாக்களை வழங்கி சாதனை படைத்திருக்கின்றோம். தமிழகத்தில், எந்த ஒரு நபரும் வீடோ, நிலமோ இல்லாமல் இருக்கக் கூடாது என்ற மறைந்த முதல்வர் கருணாநிதியின் கனவை நனவாக்குகின்ற வகையில், திராவிட மாடல் அரசும், முதல்வரும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்தப் பிரச்சினையை திசைதிருப்பும் வகையில் அண்ணாமலை பேசி வருகிறார். அவர் என்னை ஒருமையில் பேசுவது, அவரது தரத்தைக் கட்டுகிறது. மத்திய அரசிடம் பேசி, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை வாங்கித் தர துப்பில்லை. இவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள்.

தமிழகத்தின் நிதி உரிமையை மீட்டுத் தர வேண்டும். அதற்கு உபயோகமாக எதாவது செய்ய முடிந்தால், அவரை செய்யச் சொல்லுங்கள். 2018-ம் ஆண்டு தமிழகத்துக்கு வந்த பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டதால், மக்களை சந்திக்க பயந்துகொண்டு, சுவரை எல்லாம் உடைத்துக்கொண்டு திரும்பிச் சென்றார். இதெல்லாம் அண்ணாமலைக்கு நியாபகம் இருக்குமா? எனது வீட்டை முற்றுகையிடப் போவதாகவும், வீட்டின் சுவரில் சுவரொட்டி ஒட்டுவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். நான் வீட்டில்தான் இருப்பேன். முடிந்தால் வரச் சொல்லுங்கள். ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் ஏதோ செய்வதாகக் கூறியிருந்தார். அவருக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் எதுவும் சட்டவிரோதமாக நடத்தப்படவில்லை. மத்திய அரசின் அனுமதி வாங்கித்தான் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் இலவசமாக உணவு, உடை வழங்கப்படுகிறதா? எனவே, தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளையும் ஒப்பிட வேண்டாம். இவ்வாறு உதயநிதி கூறினார்.