எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் வளைகுடா அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக குற்றம்சாட்டியது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் தரப்பை நியாயத்தை எடுத்து சொல்ல கூட நேரம் தரவில்லை. உடனே கைது செய்யப்பட்டவர்களை அருகிலுள்ள இலங்கை துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். அடுத்தகட்ட நடவடிக்கையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது புதிதல்ல. பல ஆண்டுகளாக நடைபெறும் நிகழ்வு தான். ஆனால் சமீப காலமாக அடுத்தடுத்து தொடர் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தான் பெரும் அதிர்ச்சியூட்டும் செய்தியாக பார்க்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு, படகுகள் சேதம், கைது, சிறை, லட்சக்கணக்கில் அபராதம் என பகீர் கிளப்பும் தகவல்கள் இலங்கையில் இருந்து வந்த வண்ணம் உள்ளன. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் பெரிதும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இவர்கள் கதறி அழுது போராட்டங்களில் ஈடுபடும் வீடியோக்கள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன.
இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். சமீபத்தில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பல்வேறு மீனவ சங்கங்கள் நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தின. மறுபுறம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதி வருகிறார்.
தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொண்டிருக்கிறார். நடப்பாண்டு ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து எடுத்து கொண்டால் 90க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஏராளமான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டன. இவற்றை மீட்க வேண்டும் என்று ஒருபுறம் தமிழக மீனவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இலங்கை அரசோ தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விட்டு அதிர்ச்சி அளிக்க மும்முரம் காட்டி வருகிறது.