நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி காளியம்மாள் திமுகவில் இணைந்தால் அவரை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் திமுகவில் இணைய போகிறாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். கட்சியில் இருந்து செல்வோர் செல்லலாம் என சீமானே சிக்னல் கொடுத்துவிட்டாரே! அப்படி வந்தால் காளியம்மாளை ஏற்பது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார்.
தமிழகத்திற்கு நியாயமாக கொடுக்க வேண்டிய கல்வித் தொகையை கூட மத்திய அரசு தர மறுக்கிறது. திமுக ஆட்சிக்கு வரும் போது கஜானா காலியாக இருந்தது. ஆனால் முதல்வர் மதிநுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான ஆட்சி கொடுத்து வருகிறார். எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் நிதியை நிறுத்தினாலும் எங்கள் பணி தொடரும். இருமொழி கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
பழுத்த மரத்தின் மீது கல் எறிந்தால் லாபம் இருக்கும் என திமுக மீது சீமான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ஆட்சியில் இருந்த போது எத்தனை வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார். வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை கூகுளில்தான் தேட வேண்டும்.
இந்து அறநிலையத் துறை பெயரை தமிழ்நாடு கோயில்கள் துறை என மாற்ற வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். எங்களை பொருத்தமட்டில் அறிவுரைகள், எது வந்தாலும் அலசி ஆராய்வோம். வாய்ப்பு இருந்தால் தமிழக முதல்வர் முடிவெடுப்பார். இவ்வாறு சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். சீமான் மீது இருந்த அதிருப்தியால் அவர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர். அதிலும் பெரியார் குறித்து சீமான் கடுமையாக விமர்சித்திருந்ததை சொந்த கட்சியினரே ஏற்காமல் மாற்றுக் கட்சியில் இணைந்துவிட்டனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போகிறார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இதை காளியம்மாள் மறுத்தார். இந்த நிலையில் அடுத்த மாதம் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் உறவுகள் சங்கமம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளியம்மாளின் பெயர் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டிருந்தது. இதனால் காளியம்மாள் நாதகவில் இருந்து விலகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்தது.
அதை விட அவர் திமுகவில் இணைகிறாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த விழாவில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் எல்லாம் கலந்து கொள்கிறார்கள். இது குறித்து காளியம்மாள் கூறுகையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். இது குறித்து சீமானிடம் கேட்ட போது கட்சிக்கு யார் வந்தாலும் வரவேற்கிறோம். அது போல் போனால் போகட்டும் என வழியனுப்பி வைக்க வேண்டும். இலையுதிர்காலம் போல் எங்கள் கட்சிக்கு இது களையுதிர்காலம் என தெரிவித்திருந்தார். எனவே காளியம்மாள் எந்த கட்சியில் இணைய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காளியம்மாள் மீது சீமான் அண்மைக்காலமாக கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.