திராவிட மாடல் எனும் பெயரில் மக்களை ஏமாற்றும் திமுக அரசையும், இயக்கத்தின் இருபெரும் தலைவர்களை புறக்கணித்த கயவர் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட ஜெயலலிதா பிறந்தநாளில் நாம் அனைவரும் சபதமேற்றிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
“எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்றார் அண்ணா.. “எதிர்ப்பை தாங்குவது அவ்வளவு எளிதானது அல்ல, அத்தகைய எதிர்ப்பின் நடுவிலும் கடமையைச் செய்வதே பெருமைக்குரியது” என்றார் எம்.ஜி.ஆர்.. இருபெரும் தலைவர்களின் வழித்தடங்களை பின்பற்றி எதிர்ப்புகளுக்கும், தடைகளுக்கும் மத்தியில் எண்ணற்ற சாதனைகளை படைத்து தமிழக மக்களின் மனதில் தனக்கென இடத்தை தக்கவைத்திருப்பவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
திசை நான்கிலும் சூழ்ந்து நின்ற பகைகளை தூள் தூளாக்கி மக்கள் சக்தியை மட்டுமே மகத்தான துணையாக கொண்டு சரித்திரமிக்க சாதனைகள் படைத்த ஜெயலலிதாவின் வாழ்க்கைப் பயணம் என்பது இதுவரை யாரும் கண்டிராத, எவராலும் கடக்க முடியாத வீர சகாப்தம்.
தேர்தல் நேரத்தில் நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு தேர்தலுக்கு பின் மக்களை ஏமாற்றி திசைதிருப்பும் இன்றைய ஆட்சியாளர்களுக்கு மத்தியில் தமிழக மக்களுக்காக கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் தன் இறுதி மூச்சுவரை உழைத்தவர் ஜெயலலிதா.
ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்க அம்மா உணவகங்கள், பள்ளி மாணவர்கள் மேற்படிப்புக்கு உதவும் விலையில்லா மடிக்கணினிகள் மற்றும் விலையில்லா மிதிவண்டிகள், ஏழை விவசாயிகள் வாழ்க்கைத்தரம் மேம்பட விலையில்லா ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம், மகளிருக்கென தனி காவல் நிலையங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம், பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என ஜெயலலிதா தீட்டிய எண்ணிலடங்கா திட்டங்கள் அனைத்தும் தேசிய அளவில் முன்னுதாரணமாக திகழ்கின்றன.
மக்களை ஏமாற்றும் போக்கு என்ற ஒன்றை மட்டுமே இலக்காக நிர்ணயித்து செயல்படும் திமுக அரசால், மாணவ, மாணவியர்கள் தொடங்கி இளைஞர்கள், விவசாயிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு, குறு தொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் அளவில்லா துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம், பலமுறை உயர்த்தப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களின் விலை, பன்மடங்கு அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம், பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம், சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் வரி, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு என அனைத்து விதமான வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்திய திமுக அரசுக்கு எதிரான மனநிலை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் என மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவிற்கு தான் இருக்கிறது. அதிலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கி அரசுப்பள்ளிகள் வரை குழந்தைகள், காவலர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக நாள்தோறும் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகும் செய்திகள் போலி திராவிட மாடல் அரசின் முகத்திரையை கிழித்துக் கொண்டிருக்கின்றன.
தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்கள் வரை ஆளுங்கட்சி ஆதரவோடு சர்வ சாதாரணமாக புழங்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும், டாஸ்மாக் மதுபானக் கடைகளிலேயே காவல்துறை உதவியோடு சட்டவிரோதமாக விற்கப்படும் கள்ளச்சாராயங்களும், அதனால் ஏற்படும் குற்றச்சம்பவங்களும், மரணங்களுமே தான் நான்காண்டு கால திமுக அரசின் ஒரே சாதனையாக உள்ளது. இதைத்தான் திராவிட மாடல் என மூச்சுக்கு மூச்சு முழங்குகிறார்களா தற்போதைய ஆட்சியாளர்கள்?
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியாத பள்ளிக்கல்வித்துறை, மின்கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திய பின்பும் தடையற்ற மின்சாரத்தை விநியோகிக்க மறுக்கும் மின்சாரத்துறை, குற்றச்சம்பவங்களை தடுக்கத் தவறி முற்றிலும் செயலிழந்து இருக்கும் காவல்துறை என தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் பெயரளவில் துறைகளாக மட்டுமே இருக்கிறதே தவிர பொதுமக்களை பாதுகாப்பதற்கோ அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கோ செயல் அளவில் இதுவரை எதுவுமே செய்ததாக தெரியவில்லை.
தமிழகம் ஒவ்வொரு துறையிலும் தனித்துவமிக்கதாக திகழ வேண்டும், இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மாநிலமாக சிறந்து விளங்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடும், கொள்கை பிடிப்போடும் தமிழகத்தை காப்பதிலும், தமிழர் உரிமைகளை மீட்பதிலும் இறுதிவரை உறுதியாக இருந்த ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கமும், சின்னமும் கயவர்களின் கைகளில் சிக்கி படிப்படியாக அதன் தனித்தன்மையை இழந்து விட்டது.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும், மக்களுக்கு உதவுவதையே லட்சியமாக கொண்டிருந்த நிலையில், அவ்விரு தலைவர்கள் உதிரம் சிந்தி வளர்த்த இயக்கத்தை தற்போது அபகரித்து வைத்திருக்கும் துரோகக் கும்பல் தமக்கு பதவி பெறுவதையே லட்சியமாக கொண்டிருக்கிறது. அண்மையில் தனக்குத் தானே பாராட்டு விழா நடத்திக் கொண்ட பழனிசாமி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களை புறக்கணித்திருப்பது இருபெரும் தலைவர்களின் உண்மைத் தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்தது தான் ஜனநாயகம் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தவர் ஜெயலலிதா. ஆனால் குடும்ப நலத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கும் திமுக ஆளுங்கட்சியாகவும், ஒரு சிலரின் சுயநலத்திற்காக மட்டுமே இயங்கும் இயக்கம் எதிர்க்கட்சியாகவும் இருப்பது ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அடியோடு இழக்கச் செய்திருக்கிறது. திராவிட மாடல் எனும் பெயரில் மக்களை ஏமாற்றும் திமுக அரசையும், இயக்கத்தின் இருபெரும் தலைவர்களை புறக்கணித்த கயவர் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட ஜெயலலிதா பிறந்தநாளில் நாம் அனைவரும் சபதமேற்றிடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.