அமைச்சர் அன்பில் மகேஷின் மகன் ஏன் பிரெஞ்ச் படிக்கிறாரு: எச்.ராஜா!

அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்று கூறும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் மகன், பன்மொழி கற்பிக்கும் ஆழ்வார்பேட்டை International பள்ளியில் பிரெஞ்ச் படிப்பது ஏன் என தமிழக பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது எனக் கூறியிருந்தார் மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான். அவரது பேச்சு தமிழகம் முழுவதும் பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது. இதை அடுத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பு என்ற தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது என விமர்சித்துள்ளார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷின் மகன், பன்மொழி கற்பிக்கும் ஆழ்வார்பேட்டை International பள்ளியில் பிரெஞ்ச் படிப்பது ஏன் என தமிழக பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்று கூறும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களே! திமுகவை சேர்ந்த எத்தனை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயில்கிறார்கள் என்கிற பட்டியலை தமிழக சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்ய தயாரா?

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் நீங்கள் ஏன் உங்களுடைய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இருமொழி கற்பிக்கும் பெருமைமிக்க அரசு பள்ளியில் உங்கள் மகன் திரு.கவின் பொய்யாமொழி அவர்களை சேர்க்காமல் பன்மொழி கற்பிக்கும் ஆழ்வார்பேட்டை International Curriculum School ல் சேர்த்து பிரெஞ்ச் படிக்க வைக்கிறீர்கள்? அரசு பள்ளிகளை பெருமையின் அடையாளம் என்று கூறும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களே பிறகு ஏன் திமுக தலைவர்கள் பெருமைமிக்க அரசு பள்ளிகளை போல் சமச்சீர் வழி பள்ளிகளாக தாங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களை உருவாக்காமல் CBSE பள்ளிகளை உருவாக்கினார்கள்? பெருமைமிக்க தமிழக அரசு ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் 3192 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள், 2600 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், 3058 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் அவ்விடங்களுக்கு தகுதியான ஆசிரியர்களை பணி நியமனம் செய்யாமல் காலதாமதம் செய்து வருகிறீர்கள்?

பெருமைமிக்க தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவு எண்ணிக்கை குறைவாகவும், மாணவர்கள் கல்வி இடைநிற்றல் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கிறதே அதை தவிர்க்க, குறைக்க, நிவர்த்தி செய்ய இதுவரையிலும் நீங்கள் எந்த முயற்சியும், நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? உண்மையிலேயே அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளமாகத்தான் இருந்தன.. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் வரை.. திராவிட மாடல் கல்விக்கொள்கை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் அச்சேறும் வரை. அரை நூற்றாண்டு கால திராவிட மாடல் அரசியலால் அழிவின் விளிம்பில் இருப்பது தமிழக அரசு பள்ளிகள் மட்டுமல்ல! அறிவில் சிறந்த தமிழினத்தின் வளர்ச்சியும், எதிர்காலமும் தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.