தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து வைத்திருக்கும் நிலையில், அவர்களை உடனடியாக மீட்டு வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது தாக்குதல் மற்றும் கைது செய்வது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 32 மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறி கைது செய்யப்பட்டு உள்ளனா். அவர்களை உடனடியாக விடுவிக்க கோரி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீனவர்கள் கைது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
பாஜக தமிழ்நாடு சார்பாகவும், தமிழக மீனவ சமூகத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் சார்பாகவும், வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை திருப்பி அனுப்புவதில் சரியான நேரத்தில் தலையிட்டதற்காக உங்கள் நல்ல அலுவலகத்திற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
22-02-2025 அன்று 5 படகுகளில் பயணம் செய்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 32 மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்ததாகக் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உங்கள் நல்ல அலுவலகத்திற்குத் தெரிவிக்க விரும்புகிறோம். மீனவர்களின் 5 மீன்பிடி படகுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மீனவர்கள் தலைமன்னார் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறியப்பட்டது. சமீப காலமாக இலங்கை கடற்படை தமிழ் மீனவர்களை அதிக அளவில் தடுத்து வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.
ஐயா, தமிழ்நாட்டில் உள்ள பாஜக சார்பாக, இந்த பிரச்சினையில் உங்கள் நல்ல அலுவலகம் விரைவில் தலையிட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் வருமானத்தையே முழுமையாக நம்பியுள்ள அவர்களின் துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விரைவாக திருப்பி அனுப்புவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.