ஈஷா யோகா சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்!

ஒலி மாசுடன் சிவராத்திரி விழாவை ஈஷா யோகா மையம் நடத்தவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டுமென்றும் கோரப்பட்ட வழக்கில், மனுவை ஏற்க எந்த முகாந்திரமும் இல்லையென கூறி தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு வரும் 26-ம் தேதி மாலை 6 மணிக்கு மகாசிவராத்திரி விழா தொடங்கி, மறுநாள் நாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஈஷா நிறுவனர் சத்குரு முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில், தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வின்போது, “மிராக்கிள் ஆஃப் தி மைண்ட்” என்ற இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளார். தினமும் 7 நிமிடங்கள் சத்குருவின் வழிகாட்டுதலுடன் மக்கள் தியானம் செய்யும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை மறுநாள் ஈஷா நிகழ்வை பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

இதனிடையே, கோவை சரவணம்பட்டியை சேர்ந்த எஸ்.டி.சிவஞானன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், “வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான பொதுமக்கள் ஈஷா யோகா மையத்துக்கு வருகின்றனர். இந்த நிகழ்வால் வெள்ளியங்கிரி மலையின் இயற்கை வனச்சூழல் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் பங்கேற்க 7 லட்சம் பேருக்கு மேல் திரண்டதால் ஏற்பட்ட கழிவுநீர் வனப்பகுதிகளை மட்டுமின்றி, அருகில் உள்ள விவசாய நிலங்களையும் பாழ்படுத்தியுள்ளது.

விடிய, விடிய நடைபெறும் நிகழ்வில் அரசு நிர்ணயம் செய்துள்ள 45 டெசிபல் ஒலி அளவை விட விதிகளை மீறி அதிகப்படியான ஒலி மாசு ஏற்படுத்தப்படுகிறது. எனவே, ஈஷா யோகா மையத்தில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளை செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் வனச்சூழலை பாதிக்கும் வகையிலும், ஒலி, ஒளி மாசு ஏற்படுத்தும் வகையிலும் சிவராத்திரி விழாவை நடத்தக்கூடாது என ஈஷா யோகா மையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஸ்வரன், “ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சிவராத்திரி விழாவில் எந்தவொரு சட்டவிதிகளும் பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள உத்தரவுகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகிறது” வாதாடினார்.

சிவராத்திரி நெருங்கும் நேரத்தில் உடனே ஈஷா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், “தனது நிலத்தை ரூ.100 கோடிக்கு வாங்க மறுத்ததால் மனுதாரர் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். கடந்த வருடமும் இப்படித்தான் சிவராத்திரி நெருங்கும் நேரத்தில் வழக்கு தொடர்ந்தார். சிவராத்திரி விழா நிகழ்வின்போது எந்த விதிமீறலும் மீறப்படுவதில்லை” என்றார்.

இதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “சிவராத்திரி நிகழ்வில் விதிமீறல்கள் இருந்தால் அரசு வேடிக்கைப் பார்க்காது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். சிவராத்திரி விழாவில் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும்” என்றார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா என்பதை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 24-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மற்றும் ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் ஈஷாவில் மகாசிவராத்திரி விழாவின் போது அனைத்து சட்ட விதிகளும் பின்பற்றப்படுவதாகவும், விதிகள் அமல்படுத்தப்படுவதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட மனுதாரர், விதிகளை மீறி இரவு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதாகவும் இதன்மூலம் ஒலிமாசு ஏற்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். ஈஷாவில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்புக்காக மூன்று புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, சிவராத்திரி நிகழ்ச்சிக்கு 7 லட்சம் மக்கள் வருகை தரும் நிலையில் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் போதுமானவை அல்ல என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஈஷா வளாகத்தில் உள்ள கல்வி நிறுவன கட்டிடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் 70 ஏக்கர் நிலத்தில் தான் விழா நடப்பதாகவும், சரவணம் பட்டியில் வசிக்கும் மனுதாரர் எப்போதெல்லாம் சிவராத்திரி விழா வருகிறதோ அப்போதெல்லாம் பக்கத்து நிலத்துக்காரர் ஆகிவிடுவதாக ஈஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஒலி மாசு கட்டுப்படுத்தவும், கழிவு நீர் சுத்திகரிப்புக்கும் போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள நிலையில், வெறும் அச்சத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் எந்த காரணமும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.