நீதி முறைமையை நீர்த்துப்போகச் செய்யும் வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவு–2025ஐ நிறுத்தி வைப்பதென்பது ஏமாற்றுவேலை; இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
இந்திய வழக்கறிஞர்கள் சட்டம் 1961இல் மாற்றம் கொண்டுவரும் வகையில் வழக்கறிஞர்கள் திருத்தச் சட்டம்-2025 ஐ நிறைவேற்றுவதற்கான வரைவு நகல் ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் இணையத்தில் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
11 ஆண்டுகால பாஜக ஆட்சிக்காலத்தில் தனது இந்துத்துவக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் விதமாக அடுத்தடுத்து பல சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றி வருகிறது. குடியுரிமை திருத்தச்சட்டம், வனப்பாதுகாப்பு திருத்தச்சட்டம், வக்பு வாரிய திருத்தச்சட்டம், குற்றவியல் திருத்தச்சட்டம், மின்சார திருத்தச்சட்டம், முத்தலாக் திருத்தச்சட்டம் என்று பல்வேறு திருத்தச்சட்டங்களைக் கொண்டுவந்து இந்திய அரசியல் அமைப்பையே முற்று முழுதாக சிதைத்துவருகிறது. அதன்படி தற்போது, வழக்கறிஞர்கள் சட்டம் 1961 இல் திருத்தங்களைக் கொண்டுவந்து வழக்கறிஞர் கழகத்தைத் தங்களது அதிகாரத்திற்கு உட்பட்ட கைப்பாவை அமைப்பாக மாற்ற மோடி அரசு முயல்கிறது.
ஏற்கனவே, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, குற்றப்புலனாய்வுத்துறை தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகள் அனைத்தையும் தாங்கள் நினைத்ததைச் செய்து கொடுக்கும் ஏவல் அமைப்புக்களாக மாற்றி நிறுத்தியுள்ள மோடி அரசிற்கு மிகப்பெரிய இடையூறாக உள்ளது இந்த நாட்டின் நீதி அமைப்பாகும். மக்களாட்சி நாட்டில் கொடுங்கோன்மை ஆட்சியாளர் புரியும் வரம்பற்ற அநீதிகளையும், அதிகார அடக்குமுறைகளையும் தடுத்து காக்கும் காவலரணாக நீதிமன்றங்களே உள்ளன. இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான ஏழை மக்களின் இறுதி நம்பிக்கையாக உள்ளது நீதியரசர்களும், வழக்கறிஞர் பெருமக்களுமே ஆவார்கள்.
அதனையும் அடியோடு சிதைக்கவே, குற்றவியல் சட்டங்களையும், நீதிபதிகள் தேர்வு செய்யும் முறையையும் தங்களுக்குச் சாதகமாக பாஜக அரசு மாற்றியது. அதனையடுத்து தற்போது வழக்கறிஞர் சட்டத்திலும் தங்களுக்கு ஏற்ற வகையில் திருத்தங்களைக் கொண்டுவந்து வழக்கறிஞர்களைக் கட்டுப்படுத்த முனைகிறது பாஜக அரசு. தற்போது, வழக்கறிஞர் திருத்தச்சட்டம் 2025 வரைவு நகலினை ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் இணையத்தில் பாஜக அரசு வெளியிட்டுள்ளது.
இப்புதிய சட்டத்திருத்த வரைவானது வெளிநாட்டு சட்ட நிறுவனங்களையும், வெளிநாட்டு வழக்கறிஞர்களையும் இந்தியாவிற்குள் வழக்கறிஞர் தொழில் புரிய அனுமதிக்கிறது. ஏற்கனவே, நம் நாட்டில் பிறந்து சட்டம் பயின்ற பல்லாயிரக்கணக்கான நம்முடைய வழக்கறிஞர் பெருமக்கள் போதிய வருமானமின்றி வறுமையில் வாடி வரும் நிலையில் வெளிநாட்டு வழக்கறிஞர்களை இந்தியாவில் அனுமதிப்பது நம்முடைய வழக்கறிஞர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும், இப்புதிய சட்டத்திருத்த வரைவு 49(B) யின் படி இந்திய வழக்கறிஞர் கழகத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். மேலும், பிரிவு 4 இன்படி ஒன்றிய அரசு நியமிக்கும் மூன்று உறுப்பினர்கள் இந்திய வழக்கறிஞர் கழகத்தில் கட்டாயமாக இடம் பெற வேண்டும் என்று வரையறுக்கிறது. எனவே இத்திருத்தச்சட்டம் நிறைவேறினால் இனி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இந்திய வழக்கறிஞர் கழகமும், வழக்கறிஞர்களும் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அதுமட்டுமின்றி, இத்திருத்தச்சட்டத்தின் பிரிவு 35(A) இன்படி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்ய தடை விதிக்கிறது. அதனைமீறி நீதிமன்றப் புறக்கணிப்புச் செய்யும் வழக்கறிஞர்களின் செயல் நடத்தை விதிமீறலாக கருதப்படும். இதன் விளைவு இடைநீக்கத்தில் தொடங்கி நிரந்தர நீக்கத்தில் போய் முடியும்.
தற்போது நாடு முழுவதும் வழக்கறிஞர் பெருமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவுடன், தற்போது நிறுத்தி வைப்பதாக ஒன்றிய அரசு அறிவித்திருப்பது தற்காலிக ஏமாற்று நடவடிக்கையாகும். திருத்தச்சட்ட வரைவினை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதே அனைவரது ஒருமித்த கோரிக்கையாகும்.
ஆகவே, வழக்கறிஞர் பெருமக்களின் தொழிலுக்கும், நலனுக்கும் பேராபத்தை ஏற்படுத்தி, மக்களாட்சியின் ஆணி வேராக விளங்கும் இந்த நாட்டின் நீதி முறைமையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவு–2025ஐ இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.