ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வி.கே.சசிகலா மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவாளர்களிடையே பேசினார். அதிமுகவை இணைப்பதே தனது நோக்கம் என்று கூறினார்.
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தமிழ்நாடு முழுக்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறுவோம், அந்த இலக்கை நோக்கியே நமது பயணம் என வி.கே.சசிகலா பேசினார். அவர் மேலும் கூறியதாவது:-
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறுவோம். அந்த இலக்கை நோக்கியே நமது பயணம். இதைத்தான் கழகத் தொண்டர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். எனக்கென்று யாரும் இல்லை, தமிழக மக்கள்தான் எனது குடும்பம். தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் எப்போதும் ஒலிக்கும். எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழிகொடுக்கும். உண்மை என்றும் தோற்காது என்ற நம்பிக்கையுடன் இருங்கள் வெற்றி நிச்சயம்.
திமுகவினர் என்றாலே ரகளை செய்வது, அடாவடி செய்வது போன்ற வேலைகளை செய்வது என்பது வாடிக்கையானது. திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் மக்களை கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது. சுய விளம்பரத்துக்காக மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தன்னலம் கருதாமல் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
ஜெயலலிதா சொன்ன ஒரு கதை தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. பாவம் செய்த ஒருவன் நரகத்துக்கு போகிறான். நகரத்துக்கு போகும் பாதையில் ஒரு சிலந்திப் பூச்சியை மிதிக்காமல் காலை தூக்கி வைத்துச் சொல்கிறான். அந்த சின்ன புண்ணியத்துக்காக சொர்க்கத்தில் இருப்பர்கள் அந்த மனிதனுடன் பேசுகின்றனர். மேலே ஒரு சிலந்தி சொர்க்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. அதன் நூல் கீழே வரை தொங்குகிறது, அந்த நூலை பிடித்து நீ மேலே வா என்று சொல்கிறார்கள். உடனே அந்த மனிதர், நூலை பிடித்து மேல்நோக்கி ஏறுகிறார். அப்போது நரகத்தில் இருக்கும் மேலும் சிலரும் அந்த நூலை பிடித்து தொங்கிக்கொண்டு மேலே சென்று கொண்டிருக்கின்றனர். உடனே, அந்த நபர், நம்மை மட்டும் தானே கூப்பிட்டார்கள், கூட இவர்களும் ஏன் வருகிறார்கள் என உதைத்து தள்ளுகிறார். உடனே நூல் அறுந்து அவரும் சேர்ந்து விடுகிறார். நான் என்ன சொல்கிறேன் என்றால், யாராக இருந்தாலும் சுய வெறுப்பின்றி தன்னலம் கருதாமல் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் வெற்றியடைய முடியும். இதுவே மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய நன்மை.
தீயசக்தி திமுகவை விரட்டி, ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டு வருவதற்கு அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதை தொண்டர்களும் உணர்ந்துள்ளனர். தொண்டர்களின் எண்ணத்தை ஈடேற்றிடவும், தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்றிடவும், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.