வாங்குவதற்கு மேல் கூவும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார்: ஆ.ராசா!

தொகுதி மறுவரையறைத் திட்டம் என்பது தென் இந்திய மாநிலங்களின் தொகுதிகளை குறைத்து, இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களின் தொகுதிகளை அதிகரிக்கும் சதிச்செயலாகும் எனவும், எதன் அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு இருக்கும் என்பதை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்தவில்லை என திமுக எம்பி ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுவதாகக் கூறப்படும் நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் 31 தொகுதிகளாக குறையலாம் என கூறப்படுகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், “தமது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளைப் போல, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கும், மும்மொழிக் கல்வி கிடைப்பதைத் தடுக்கும் தனது வாதத்தை, பெயிண்ட் டப்பாவைத் தூக்கித் திரியும் சிலரைத் தவிர, ஒட்டு மொத்த தமிழகமுமே நிராகரித்துவிட்டதை அறிந்தவுடன், நாடாளுமன்ற இடங்கள் குறைப்பு என்ற தனது கற்பனையின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். தனது நிலைப்பாட்டில் அவமானகரமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது திமுக” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இதற்கிடையே அண்ணாமலையை விமர்சித்துள்ளார் திமுக எம்பியான ஆ.ராசா. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

தொகுதி மறுவரையறைத் திட்டம் என்பது தென் இந்திய மாநிலங்களின் தொகுதிகளை குறைத்து, இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களின் தொகுதிகளை அதிகரிக்கும் சதிச்செயலாகும். எதன் அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு இருக்கும் என்பதை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்தவில்லை. ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்று சொல்கிறார். அவர் சொல்வதுபோல அமித்ஷா கூறவில்லை. வாங்குவதற்கு மேல் கூவும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார்.

ஒன்றிய அமைச்சர் அமித்ஷா இந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை முழுவதும் குழப்பமாக உள்ளது. அமித்ஷா சொல்லாத ஒன்றை அவரிடம் இருந்து மைக்கை வாங்கி அண்ணாமலை புது கருத்தாக சொல்கிறார். அந்த கருத்து தவறு, ரொம்ப சாதாரணமாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், “ஏன்பா வாங்குன காசுக்கு மேல கூவுற” என்பாங்க.. அதுமாதிரி வாங்குன காசுக்கு மேல கூவுறாரு அண்ணாமலை. மக்கள் தொகை அடிப்படையில் மறு சீரமைப்பு என்றால், மக்கள் தொகையை குறைத்ததால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். ஆனால், வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்! இது அநீதி! ஒன்றிய அரசின் அறிவுரையைக் கேட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாட்டுக்கு தண்டனை அளிப்பதா? இவ்வாறு அவர் கூறினார்.