நம் எதிரிகள் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்: விஜய்!

“நம் அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் ‘ஹேஷ்டேக்’ போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று திமுக மற்றும் பாஜகவை தவெக தலைவர் விஜய் மறைமுகமாக விமர்சித்தார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.. தோழிகளே.. எல்லோருக்கும் என்னுடைய வணக்கம். இந்த அரசியல் என்றாலே வேற லெவல் தான்ல.. ஏனென்றால் இந்த அரசியலில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றை நாம் பார்க்க முடியும். யார் யாரை எதிர்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது. யார் யாரை ஆதரிப்பார்கள் என்றும் சொல்லவே முடியாது. கணிக்கவே முடியாது. நிரந்தர நண்பன், நிரந்தர எதிரி இல்லை அதனால் தான் அரசியலில் மட்டும் எல்லாரும் ஒன்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். நிரந்தர நண்பனும், நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள். அப்படித்தான் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும், ஜனநாயக உரிமை என்றும் சொல்வார்கள். ஆனால் மக்களுக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச ஒருத்தர் வந்தால் அதனை கண்டிப்பாக நல்லவர்கள் எல்லாரும் வரவேற்பார்கள். ஆனால் ஒருசில இந்த அதிகார.. இல்ல அது வேண்டாம்.. ஒருசில பேருக்கும் மட்டும் கொஞ்சம் எரிச்சல் வரத்தானே செய்யும். அது இருக்கும் தானே.

என்னடா இவன் திடீரென்று வந்துட்டானே.. இதுவரை நாம சொன்ன பொய்களை எல்லாம் நம்பிக்கிட்டு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தாங்களே. ஆனால் இப்போ வந்த இவன் சொல்றதெல்லாம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறதே. அதுவே நமக்கு பெரிய நெருக்கடியாக இருக்கிறதே. இவனை என்ன பண்ணலாம்.. எப்படி குளோஸ் பண்ணலாம்.. என்ன பண்றதுன்னு தெரியாம எப்படி இவன குளோஸ் பண்ணுறது என்பதில் ஒரு குழப்பம் வரும். அந்த குழப்பத்தில கத்துறதா.. கதறுறதா.. என என்ன பண்றத்துன்னு தெரியாம.. வரவன் போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான்னு சொல்லி இப்படி எதாச்சு பேச ஆரம்பிப்பாங்க.. இப்போ நம்ம ஆட்சியில் இருக்கிறவங்க நமக்கு எதிராக பேசுகிறார்கள் அல்லவா. அந்த மாதிரி.. இப்படியொரு அரசியல் களத்தில் கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல், கொஞ்சம் கூட பயம் இல்லாமல் வருகிற எதிர்ப்புகளை எல்லாம் சும்மா லெஃப்ட் கேண்டில் டீல் பண்ணிக்கிட்டு இரண்டாம் ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளோம்.

ஒரு அரசியல் கட்சியின் பெரிய பலமே கட்டமைப்பு தான். ஆலமரம் மாதிரி ஒரு கட்சி பலமாக இருக்க வேண்டும் என்றால், அதன் விழுதுகளும் வேர்களும் பலமாக இருக்க வேண்டும் அல்லவா.. அப்படித்தான், இப்போது நாம் கட்சியை பலப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.. இப்படிப்பட்ட நிலையில் ஒரு கம்ப்ளைண்ட நம்ம மேல.. அது என்னன்னா, நம் மாவட்ட செயலாளர்கள் எல்லாம் இளைஞர்களாக இருக்கிறார்களாம்.. அண்ணா, எம்ஜிஆர் கட்சி ஆரம்பிச்சபோதும் ஆமா.. இளைஞர்கள் தான்.. அதுக்கு என்ன இப்போ.. அறிஞர் அண்ணா கட்சி ஆரம்பிச்ச போது அவர்கள் பின்னாடி இருந்ததும் இளைஞர்கள் தான். எம்ஜிஆர் கட்சி ஆரம்பிச்சபோதும் அவர்கள் பின்னாடி இருந்தது இளைஞர்கள் தான். இந்த இளைஞர்களால் தான் 1967, 1977 ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அது வரலாறு.

இப்போது இன்னொரு கம்ப்ளைண்ட். அது என்னவென்றால், நம் கட்சி நிர்வாகிகள் எல்லாரும் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்களாம். அதேதான் இங்கேயும் சொல்கிறேன். ஏன் வரக்கூடாது. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் நிறைய பெருசு பெருசா சாதித்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நம் கட்சியும் எளிய மக்களுக்கான கட்சி தானே. அப்படி இருக்கும்போது நம் கட்சியை சேர்ந்தவர்களும் எளிமையானவர்களாக தான் இருப்பார்கள். நம்ம கட்சி ஒன்னும் பண்ணையார்களுக்கான கட்சி கிடையாதுல்ல.. முன்னாடி எல்லாம் பண்ணையார்கள் தான் கட்சியில் இருப்பாங்க.. ஆனால் இப்போ அப்படியே உல்டாவா.. இப்போ பதவியில் இருக்கிறவர்கள் எல்லாம் பண்ணையார்களாக மாறிவிடுகிறார்கள்..

மக்களோட நலனை பற்றியோ.. நாட்டோடைய நலனை பற்றியோ.. வளர்ச்சிகளை பற்றியோ.. இப்படி எதைப் பற்றியும் கவலைப்படாமல், பணம்.. பணம்.. என்று எந்தெந்த வழிகளில் எப்படியெல்லாம் சம்பாதிக்கனும் என்ற இப்படிப்பட்ட மைண்ட் செட் உள்ள பண்ணையாளர்களை அரசியலை விட்டே அகற்றுவது தான் நம்முடைய முதல் வேலை. இதனை ஜனநாயக முறைப்படி செய்வதற்கு தான் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறோம். இந்த தேர்தலை சந்திக்க ரொம்ப ரொம்ப முக்கியம் பூத் லெவல் ஏஜென்ஸி. இது ரொம்ப ரொம்ப முக்கியம். தமிழ்நாட்டில் பெரிய பெரிய கட்சிகளுக்கு மட்டும் தான் இந்த பிஎல் ஏ அதிகமாக இருக்கும். நம்முடைய தோழர்களை தான் பூஜ் ஏஜெண்ட்களாக நியமிக்க போகிறோம். கூடிய சீக்கிரமே பூத் கமிட்டி மாநாடு நடத்தப் போறோம். அன்னைக்கு தெரியும் தமிழக வெற்றிக் கழகம் எந்த ஒரு பெரிய கட்சிக்கும் கொஞ்சம் கூட சளைத்தது இல்லை என்று. அன்னைக்கு தெரியும். தமிழ வெற்றிக் கழகம் தமிழ்நாட்டினுடைய முதல் பெரிய சக்தியாக.. முதன்மை சக்தியாக.. பவர்புல்லாக இருக்கிறது என்று அன்னைக்கு தெரியும்.

இப்போ ஒரு பிரச்சினை போய்க்கொண்டு இருக்கு. மும்மொழி கொள்கை. இத வந்து இங்க செயல்படுத்தவில்லை என்றால் கல்விக்காக நிதியை மாநில அரசுக்கு கொடுக்க மாட்டாங்களாம். எல்கேஜி, யுகேஜி பசங்க சண்டை போட்டுக்கொள்வார்களே.. அதுமாதிரி.. கொடுக்க வேண்டியது அவர்களோட உரிமை.. வாங்க வேண்டியது இவர்களோட உரிமை. ஆனால் இவங்க இரண்டு பேரும், இவ்வளவு பெரிய சீரியஸான விஷயம் நடந்துகொண்டிருக்கும் போது, அதான் நம்ம பாசிசமும், பாயாசமும்.. அதாங்க நம்ம அரசியல் எதிரியும்.. கொள்கை எதிரியும் என்ன பண்றாங்க என்றால், பேசி வைத்துக் கொண்டு.. இரண்டு பேரும் செட்டிங்க் செஞ்சுக்கொண்டு.. மாத்தி மாத்தி சோசியல் மீடியாக்களில் ஹேஷ்டேக் போட்டு விளையாடுகிறார்கள். வாட் ப்ரோ, வெரி ராங்க் ப்ரோ இங்க என்ன நடந்துகொண்டிருக்கிறது. அதாவது இவங்க இரண்டு பேரும் அடிச்சுக்கிற மாதிரி அடிச்சுக்கொள்வாங்களாம். இதை நாம நம்பனுமாம். வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங்க் ப்ரோ..

இந்த இரண்டுக்கும் நடுவில நம்ம பசங்க புகுந்து சைலண்டா சம்பவம் செஞ்சுட்டு டக்குனு வெளியில் வந்துட்றாங்க.. “டிவிகே பார் டிஎன்” என்று.. யார் சார் நீங்க எல்லாம்.. எங்க சார் இருக்கீங்க.. இந்த ஸ்லீப்பர் செல்ஸ் மாதிரி.. இதையெல்லாம் மக்களுக்கு நாம சொல்லி தெரிய தேவையில்லை. மக்கள் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். நம்ம ஊரு சுயமரியாதை ஊர். நாம எல்லாரையும் மதிப்போம். ஆனால் சுயமரியாதையையும் மட்டும் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம். எல்லா மொழிகளையும் மதிப்போம். அதில் மாற்றுக்கருத்தே கிடையாது. தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும் எந்த பள்ளியிலும் படிக்கலாம். எந்த மொழி வேணுமோ, எப்போ படிக்கனும்னு தோன்றுகிறதோ கத்துக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை. ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி.. மாநில தன்னாட்சி முறைக்கு எதிராக, மொழிக்கொள்கையை, கல்விக்கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணிச்சா.. அதுவும் அரசியல் ரீதியாக எதிர்த்தால்.. எப்படி ப்ரோ.. பொய் பிரசாரங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நாமும் உறுதியாக எதிர்ப்போம். நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.