தமிழக இளைஞர்களை வெறும் சினிமா புகழை மட்டும் வைத்து ஏமாற்றிவிட முடியாது: திருமாவளவன்!

தமிழ்நாட்டின் இளைஞர்களை வெறும் சினிமா புகழை மட்டும் வைத்து ஏமாற்றிவிட முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு முன்பாக தவெக சார்பில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. அதேபோல் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும், ஆளுங்கட்சிக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை விஜய் முன் வைத்தார். நடிகர் விஜய்-ன் பேச்சு தமிழக அரசியல் களத்தில் விவாதமாகி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் விஜய் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திருமாவளவன் கூறியதாவது:-

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் இப்போதுதான் தொடங்கி இருக்கிறார். அதற்குள் எந்த கட்சிக்கு பின்னடைவு வரும் என்று கேள்வி கேட்கிறீர்கள். அவர் முதலில் ஒரு தேர்தலை சந்திக்க வேண்டும். மக்கள் எந்த அளவிற்கு அவரை ஏற்றுக் கொள்கிறார்கள், அங்கீகரிக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அந்த முடிவுகளை வைத்தே யாருக்கு பின்னடைவு என்று சொல்ல முடியும். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விஜய் போன்ற புதிய வரவுகள் தேர்தல் களத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் கூட அவர்களால் பெரியளவில் இதுவரை சாதிக்க முடியவில்லை.

தற்போது உள்ள சூழலில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லை என்பதால் திமுக மற்றும் அதிமுகவை பலவீனப்படுத்த முடியும் என்று கணக்கு போடுகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுகவை தாண்டி முற்போக்கு ஜனநாயக சக்திகள், சமூகநீதி அரசியல் பேசும் கட்சிகள், கருத்தியல் சார்ந்து மக்களை அமைப்பாக்கி அணிதிரட்டக் கூடிய கட்சிகள், விசிக உள்ளிட்ட பல கட்சிகள் இருக்கிறோம். அதனால் வெறும் சினிமா புகழை மட்டுமே மூலாதாரமாக கொண்டு எல்லாவற்றையும் ஓரம்கட்டிவிட முடியும் என்று சொல்ல முடியாது.

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விவரமானவர்கள். இளைய தலைமுறையைச் சார்ந்தவர்கள் அரசியல் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அவ்வளவு எளிதாக தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை ஏய்த்துவிட முடியாது, ஏமாற்றிவிட முடியாது. தேர்தல்தான் உரிய முடிவுகளை சொல்லும், உணர்த்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.