“தமிழ்வழியில் படித்து, தமிழிலேயே குடிமைப் பணித் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆகி, தமிழாராய்ச்சியின் பரப்பைத் தமிழகத்தையும் தாண்டி, ஏன் இன்றைய இந்திய நாட்டையும் தாண்டி அகலப்படுத்தியவர்,” என்று உலகத் தமிழராய்ச்சி நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பாலகிருஷ்ணனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “தமிழ்வழியில் படித்து, தமிழிலேயே குடிமைப் பணித் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆகி, தமிழாராய்ச்சியின் பரப்பைத் தமிழகத்தையும் தாண்டி, ஏன் இன்றைய இந்திய நாட்டையும் தாண்டி அகலப்படுத்திய அறிஞர் பாலகிருஷ்ணன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையொட்டி மகிழ்ச்சி நிறைந்த மனத்தோடு வாழ்த்தினேன். 1812-ல் வெளியான திருக்குறளின் முதல் அச்சுப் பதிப்பை அன்பளிப்பாகத் தந்தார். அவர் பணி சிறந்து, தொல்தமிழர் வரலாற்றின் பல புதிய பக்கங்களை உலகுக்கு வெளிக்காட்டட்டும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னை தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு புதிய உந்துதலை அளிக்கும். பாலகிருஷ்ணன் ஒரு புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல்லுநரும் ஆவார்.
தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களைப் பெற்ற இவர், தமிழில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர். ஆய்வாளர், படைப்பாளர் என்ற இரு தளங்களில் செயல்படும் இவர் 15 நூல்களின் ஆசிரியர். சிந்துவெளிப் பண்பாட்டு தொல்லியல் தரவுகளை சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வுத் தரவுகளுடன் ஒப்பிட்டு இவர் எழுதியுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்திய ஆட்சிப் பணியில் 1984-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒடிசா அரசிலும், தேர்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர். திராவிட மொழிக்குடும்பத்தின் பரவல், சிந்து சமவெளிப் பண்பாடு, தொல்தமிழ்த் தொன்மங்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறள் குறித்த இவரது செயல்பாடும் பங்களிப்பும் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்டுள்ளது, என்று தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.