இயக்குநர் அமீர் வங்கி கணக்கில் ஜாபர் சாதிக் பணம்: அமலாக்கத்துறை தகவல்!

போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தி உள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அதேபோல் போதைப் பொருள் விற்பனை செய்த பணத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது. ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கில் இயக்குநர் அமீர் உட்பட 12 பேர் மீது 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் ஜாபர் சாதிக்கின் படத் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் செயல்பட்டு வந்துள்ளார். போதைப் பொருள் விற்பனை செய்து அதன் மூலம் ஈட்டிய பணத்தை இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளில் ஜாபர் சாதிக் வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜாபர் சாதிக் பல்வேறு போலி நிறுவனங்கள் நடத்தி அந்த நிறுவனங்களுக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளிலும் பணம் செலுத்தி வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதால், அவருக்கு ஜாமீன் வாய்ப்பு வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் அமீர் இயக்கிய இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை ஜாபர் சாதிக் தயாரித்திருந்தார். இயக்குநர் அமீர் இதுதொடர்பாக விசாரணைக்கு ஏற்கனவே ஆஜராகி விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.