நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டிய போது, அந்த சம்மன் உடனடியாக கிழிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க போலீசார் சீமான் வீட்டிற்கு சென்ற போது, திடீரென அவரின் பாதுகாவலர் கைத் துப்பாக்கியை எடுத்து நீட்டியுள்ளார். இதனால் போலீசார் – பாதுகாவலர் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலக்ஷ்மி 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011ல் புகார் அளித்தார். இதன்பின் சீமானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் விசாரணையில், பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் போலீசார் 12 வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, சீமான் மனுவையும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன்பின் விசாரணைக்காக வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். போலீசார் சம்மன் சீமான் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவர் சார்பாக வழக்கறிஞர்கள் வந்தனர். இந்த நிலையில் வளசரவாக்கம் காவல்துறை சார்பாக மீண்டும் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளிக்கப்பட்டது. இதனை நேரில் சென்று அளிப்பதற்காக சீமான் வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது அந்த சம்மனை சீமான் வீட்டின் கதவில் ஒட்டியுள்ளனர். நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் போலீசார் ஒட்டிய சம்மன் சில நிமிடங்களிலேயே கிழிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், சீமான் வீட்டின் கதவை திறக்க கோரினார். அப்போது காவல்துறை தரப்பில் எதற்காக சம்மன் ஒட்டிய சில நிமிடங்களில் கிழித்தீர்கள் என்று கேட்கப்பட்ட போது, திடீரென போலீசார் மற்றும் சீமானின் பாதுகாவலர் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது. ஒரு கட்டத்தில் சீமானின் பாதுகாவலர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து நீட்டியதால், போலீசார் அதிர்ந்துள்ளனர். இதன்பின் 2 போலீசார் இணைந்து உடனடியாக சீமானின் பாதுகாவலரை குண்டுக் கட்டாக போலீஸ் வேனுக்கு தூக்கிச் சென்றனர். அவரிடம் இருந்து கைத் துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றினர். இதனால் சீமான் வீட்டில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை பார்த்த சீமானின் மனைவி கயல்விழி, உடனடியாக மன்னிப்பு கோரியுள்ளார். அப்போது எதற்காக சம்மனை கிழித்தீர்கள் என்ற கேள்விக்கு, கயல்விழி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து போலீசார் அளித்த சம்மனை கிழித்தவரையும் கைது செய்தனர். மேலும் விசாரணையில், கைத் துப்பாக்கியை போலீசாரை நோக்கி நீட்டியவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்துள்ளது. அவரின் துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.