அதிமுக அரசின் மருத்துவத்துறை சாதனைகளுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
‘ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனம்’ என்று கிராமப்புறங்களில் மைனர்கள் சுற்றித் திரிவதுபோல், விதிவசத்தால் தமிழகத்தின் முதலமைச்சராகிய திரு. ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் மார்தட்டிக்கொண்டு அலைகிறார். மருத்துவத் துறையில் சிறப்பான கட்டமைப்புகளை உருவாக்கி, தமிழகம் முன்னோடியாக இருப்பதற்கு, ஏதோ இவரது தந்தை திரு. கருணாநிதி செய்த சாதனைகள்தான் காரணம் என்று, நேற்றைய மருத்துவத் துறை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதனால்தான் மருத்துவ வளர்ச்சி ஏற்பட்டது என்று, தமிழக மக்களுக்கு ஒன்றும் தெரியாதென்று நினைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பேசி உள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு முழு அளவில் சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும் என்று மாண்புமிகு அம்மா அவர்கள் 2012-ஆம் ஆண்டு தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தை (MRB) துவக்கினார்கள். அதேபோல், தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தட்டுப்பாடில்லாமல், முன்னதாகவே மருந்துப் பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) ஆரம்பிக்கப்பட்டு, நோயாளிகளுக்கு மருந்துகள் தடையில்லாமல் வழங்கப்பட்டன.
2011 முதுல் 2021 வரை சிவகங்கை, திருவண்ணாமலை, ஒமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கோவை இ.எஸ்.ஐ-ல் புதிய மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை, கரூர் மருத்துவக் கல்லூரிகள், பெருந்துறை மருத்துவக் கல்லூரி – ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாகவும்; இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றப்பட்டன. மேலும், மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் என்று 40 ஆண்டுகால ஆட்சியில் மொத்தம் 19 மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்தியது அம்மாவின் அரசு.
பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பிழைப்பு நடத்தக்கூடியவர் திரு. ஸ்டாலின் என்பதற்கு ஒரே உதாரணம், 108 ஆம்புலன்ஸ் சேவையை இவரது தந்தை அறிமுகப்படுத்தியதுபோல் புலம்பி உள்ளார். அன்றைய மத்திய அரசு, நாடு முழுவதற்கும் கொண்டுவந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்திற்கு தமிழ் நாட்டில் ஸ்டிக்கர் ஒட்டி துவக்கி வைத்தது திரு. கருணாநிதியின் சாதனை. இதில் இவர் மார்தட்டுவதற்கு ஒன்றுமில்லை. அதேபோல், 10 ஆண்டுகளில் அம்மா ஆட்சியில் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன; 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டன; 2000 அம்மா மினி கிளினிக்குகள் ஆரம்பிக்கப்படன.
மேலும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. கேத்லாப் கருவிகள் மற்றும் கேன்சர் சிகிச்சை அளிப்பதற்கு லீனாக் ஆக்சிலரேட்டர் பெட் ஸ்கேன் போன்ற நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு தமிழகமெங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு, மருத்துவ உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதன் காரணமாக தமிழகம் முழுவதும், குறிப்பாக கிராமப்புறங்களில் மருத்துவ வசதி பலமடங்கு மேம்பட்டன. கிராமப்புற மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வால் பாதிக்கப்படக்கூடாது என்று, மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அம்மாவின் அரசு அறிவித்ததன் மூலம், 2020 முதல் 2024 வரை சுமார் 3,446 ஏழை, எளிய மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
ஆங்கில மருத்துவம் மட்டுமின்றி, இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகளிலும் உட்கட்டமைப்பை வெகுவாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், இந்திய அளவில் ஒரு பிரசித்திபெற்ற இயற்கை யோகா மருத்துவமனை ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்ததும் அம்மாவின் அரசுதான். மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழ் நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டம் – 1ஐ துவக்கி வைத்தார்கள். தொடர்ந்து, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் ரூ. 1,634 கோடி மதிப்பீட்டில் தமிழ் நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டம் 2. அண்ணன் எடப்பாடியார் அவர்களால் 2018-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு, உலகத் தரத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
குழந்தைகள் பாலூட்டும் அறை, அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம், அம்மா சஞ்சீவினி திட்டம், அம்மா ஊட்டச்சத்து திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் என்று எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியது அம்மாவின் அரசு. அனைவருக்கும் நலவாழ்வுத் திட்டம், ரூ. 260.79 கோடி மதிப்பீட்டில் 985 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 1,844 ஆரம்ப சுகாதார நிலையங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அம்மா அரசின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இதன் காரணமாக இந்தியா முழுவதும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காக மத்திய அரசு நிர்ணயித்த கால அளவை, தமிழ் நாடு 2018-லேயே அடைந்ததால், மத்திய அரசின் பரிசைப் பெற்றோம். அதேபோல், உடல் உறுப்பு தானத்திற்காக 2015 முதல் 2020 வரை தொடர்ந்து 6 ஆண்டுகள் மத்திய அரசின் விருது பெற்றோம். பல சாதனைகளை மருத்துவத்துறையில் சாதித்துக் காட்டினோம்.
ஆனால், விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்றவுடன், மருத்துவ வசதிகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் புரட்சிகரமான ‘அம்மா மினி கிளினிக்’ திட்டத்திற்கு மூடுவிழா நடத்தியதுதான் பொம்மை முதலமைச்சரின் சாதனை. 10 ஆண்டுகால அம்மா ஆட்சியில் சுமார் 31,500 மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், சுமார் 1850 அம்மா மினி கிளினிக் மருத்துவர்களையும், பல ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாகப் பணிபுரிந்து வந்த சுமார் 500 மருத்துவர்களையும் வீட்டிற்கு அனுப்பியதுதான் ஸ்டாலின் மாடல் ஆட்சி அம்மா அரசின் ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மருந்தகத்தை, தற்போது முதல்வர் மருந்தகமாக ஸ்டிக்கர் ஒட்டி திறந்ததுதான் ஸ்டாலின் மாடல் ஆட்சி. 2021 முதல் 4 ஆண்டுகளில் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் எத்தனை மருத்துவக் கல்லூரிகளை திறந்தார் என்று பட்டியலிடத் தயாரா?
விடியா திமுக-வின் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர்த்து, மருத்துவத் துறையில் தாங்கள் சாதனை செய்ததாக வாய் ஜாலம் பேசியதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனைத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளை தமழக மக்கள் மனதில் இருந்து யாராலும் மறைக்க முடியாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தன்னுடைய நிர்வாகத் திறனற்ற ஆட்சியில் மக்கள் படும் அவலங்களை திசை திருப்பவும், மக்கள் படும் துயரங்களை வெளி உலகிற்கு தெரியாமல் தடுக்கவும், புரையோடிப்போன புண்ணுக்கு புனுகு பூசும் செயலில் இந்த பொம்மை முதலமைச்சர் ஈடுபட்டிருப்பது, அவருடைய நேற்றைய பேச்சில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. கடந்த 45 மாதகால விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியால், தமிழக மருத்துவத் துறை குறிப்பாக, அரசு மருத்துவமனைகள் சீரழிந்து கிடக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
நேற்றைய நிகழ்ச்சியில், MRB மூலமாக சுமார் 2500 மருத்துவர்களை நியமனம் செய்கிறேன் என்று அறிவித்து, மதிப்பெண் மற்றும் ரேங்க் பட்டியலை வெளியிட்டு, “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல்’ சுமார் 500 இளம் மருத்துவர்களை வீதியில் நிறுத்தி போராட வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கியதுதான் இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை. இதேபோன்ற ஒரு நிலைமை அம்மாவின் அரசில் ஏற்பட்டபோது, அண்ணன் எடப்பாடியார் அவர்கள் இளம் மருத்துவர்கள் அனைவருக்கும் போதிய கால அவகாசம் தந்து, தேர்ச்சி பெற்ற அனைத்து மருத்துவர்களுக்கும் பணி ஆணை வழங்கினார்கள்.
அனைத்திந்திய அண்ணா திமுக ஆட்சியில் மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்து, இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழ் நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்ந்தது என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். இந்த ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் படும் வேதனைகளை, களையக்கூடிய திருநாள் விரைவில் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடியார் அவர்கள் தலைமையில் மலரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.