யார் என்னவேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளட்டும், எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம்: நடிகர் வடிவேலு!

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கலாசாரம், மொழி இருக்கிறது. யார் என்னவேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளட்டும், எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று நடிகர் வடிவேலு கூறினார்.

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இப்போது இடையில் ஒன்றை கிளப்பிட்டாங்கய.. சொல்லக்கூடாது.. இருந்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும்.. தமிழ் மொழிக்கு சின்னதாய் ஒரு ஆபத்து.. அது வழக்கம் போல் வந்து கொண்டுதான் இருக்கிறது.. நான் சொல்கிறேன்.. காக்கா.காக்கா மாதிரி தான் கத்துகிறது.. அது தாய்மொழியில்.. இல்லையான்னனே .. அண்ணே உங்களத்தான் கேட்கிறேன்(சேகர்பாபுவிடம் கேட்டார்).. இங்கே பாருங்கனே..காக்கா காகான்னு அதோட தாய்மொழியில் கத்துகிறது. கிளி கீ கீ என்று அதன் தாய்மொழியில் கத்துக்கிறது.. பசு மாடு அம்மா என்று அதன் தாய்மொழியில் கத்துகிறது.. நாய் அதனுடைய தாய்மொழியில் வவ் வவ் என்று கத்துகிறது.. மாட்டினை போய் நாய் மாதிரி கத்த சொன்னால் எப்படி கத்தும்.. கிளியைபோல் காக்கா போல் கத்த சொன்னால் எப்படி கத்தும்.. பூனை மியாவ் என்று கத்துகிறது.. அதை குயில் மாதிரி கத்த சொன்னால் எப்படி கத்தும்.. வேண்டாம்..

நான் ஒன்றே ஒன்று சொல்கிறேன்.. யார் யார் எது எதை கற்றுக்கொள்ளணுமோ கற்றுக் கொள்ளட்டும்.. கட்டாயப்படுத்தாதீங்கயா.. கையெடுத்து கும்புடுகிறேன்.. எங்கள் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கலாச்சாரம் உள்ளது. ஒரு மொழி இருக்கிறது.. இதுதான் அடையாளம்.. எங்கள் தமிழ்நாட்டிற்கு அடையாளம் வந்து தமிழ் தாய் தான்.. தமிழ் மொழி தான். என்னுடைய சாதாரண வட்டார மொழி இருக்குல.. இந்த மொழி.. நான் பேசுற மொழி இருக்குல, நான் இலக்கியம் படிக்கவில்லை.. தொல்காப்பியம் படிக்கவில்லை.. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மொழி தமிழ்.. திருவள்ளூர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறள் எழுதி வைத்துள்ளார்.. அப்படி வலிமையான மொழி இப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினின் பார்வையில் நிற்கிறது.. இந்த மொழிக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.. அந்த வார்த்தை தமிழக மக்களை எல்லாம் நெகிழ வைத்துள்ளது. நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் திணிக்க வேண்டாம்.. புகுத்த வேண்டாம்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூத்த மகனாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். வெற்றி திருமகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எந்நேரமும் பற்றிக்கொண்டிருக்கிறாள் என்பது நன்றாக தெரிகிறது. வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் முதல்-அமைச்சர் தலைமையில் தி.மு.க. வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.