தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த விஷயத்தில் தென் மாநிலங்கள் அனைத்தும் போராட கைகோர்த்து வருவது தெரிய வருகிறது.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய பாஜக அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதனால் தென் மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்திற்கு 9 தொகுதிகள் குறைந்து 31 மக்களவை தொகுதிகளாக மாறிவிடும் என்று ஆளும் திமுக அரசு கூறி வருகிறது. இதுதொடர்பாக தங்களது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து விடும். இது மாநிலத்தின் உரிமை சார்ந்த விஷயம் என்றும், வரும் மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதேசமயம் கோவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென்னிந்திய மாநிலங்களில் தொகுதிகள் குறையாது. விகிதாச்சார அடிப்படையில் கூடுதல் தொகுதிகள் தான் கிடைக்கும் என்றார்.

இந்நிலையில் சற்றுமுன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், #FairDelimitationForTN என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு ஒரே இலக்கு. தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும் என்று பதிவிட்டுள்ளார்.

இதனுடன் பகிர்ந்துள்ள வீடியோவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-

என்னுடைய பிறந்த நாளை பொதுவாக ஆர்ப்பாட்டமாக, ஆடம்பரமாக கொண்டாடுவதில்லை. ஆனால் கழக உடன்பிறப்புகள் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் பொதுக்கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவார். இந்த பிறந்த நாளில் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை முன் வைக்கிறேன்.

தற்போது தமிழகம் மொழி பிரச்சினையையும், தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையையும் எதிர்கொண்டு இருக்கிறது. இதன் உண்மையான நோக்கத்தை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு என்பது நம்முடைய சுயமரியாதை, சமூகநீதி, சமூக நலத்திட்டங்களை பெரிதும் பாதிக்கும். ஒவ்வொருவரும் நமது மாநிலத்திற்காக எழுந்து நிற்க வேண்டும். இந்தியாவிற்கே வழிகாட்டியை நாம் போராட்டத்தை தொடங்க வேண்டும்.

தற்போது கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவு வந்திருக்கிறது. இதை பார்க்கும் மத்திய அரசு இந்தியை திணிக்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே, அதற்கான வேலைகளை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு நமக்கான நிதியை இன்னும் அளிக்கவில்லை.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதி எண்ணிக்கையை குறைக்க மாட்டோம் என்று சொல்கிறார்களே தவிர, மற்ற மாநிலங்களில் அதிகரிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள்தொகையை கட்டுப்படுத்தி தென் மாநிலங்களை தண்டிக்காதீர்கள். அப்படி நடந்தால் தமிழகமும், திமுகவும் ஒருபோதும் ஏற்காது. நாம் ஒரு உறுதி ஏற்க வேண்டும். தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும்- எதற்காகவும் விட்டுதர மாட்டோம்! தமிழ்நாட்டுக்காக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.