நீலாங்கரை போலீசாரின் ஈகோதான் அனைத்துக்கும் காரணம்: கயல்விழி சீமான்!

காவல்துறையினர் ஈகோவில் தான் எல்லாம் செய்கிறார்கள், வீட்டில் ஆள் இருந்தும் எதுவுமே சொல்லாமல் சம்மன் ஒட்டப்பட்டது, என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில், வளசரவாக்கம் போலீஸார் சம்மன் ஓட்டிய நிலையில், அதை கிழித்த பணியாளர் மற்றும் வீட்டின் காவலாளி ஆகிய இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அப்போது அங்கிருந்த சீமானின் மனைவி கயல்விழி, போலீஸாரிடம் மன்னிப்பு கேட்டும், இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சீமானின் மனைவி கயல்விழி, சென்னை நீலாங்கரையில் வீட்டின் முன்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காவல்துறையினர் சம்மன் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தி எனக்கு வந்தது. முன்னதாக இரண்டு வாரத்துக்கு முன்பு வளசரவாக்கம் காவல்துறையினர் வீட்டுக்கு வருகை தந்து சீமானிடம் சம்மன் வழங்கிவிட்டு சென்றனர். அப்போது அவரே போலீஸாரிடம் 2 வாரத்துக்கு தேதியில்லை என்றார். பின்னர் போலீஸார் 27-ம் தேதி தங்களது வழக்கறிஞர்கள் வந்து எழுதி கொடுக்கட்டும் என்று சொல்லிவிட்டு சென்றனர்.

நேற்று சீமான் ஊரில் இல்லை. அந்தவகையில் காவல்துறையினர் சம்மன் கொண்டுவந்தால், கையெழுத்து போட்டு வாங்கிக்கொள்ளலாம் என்ற முடிவில் தான் நான் இருந்தேன். ஆனால் வீட்டுக்கு வந்த போலீஸார் எங்களிடம் எதுவுமே தெரிவிக்காமல், வீட்டில் யாருமே இல்லாததுபோல சம்மனை ஒட்டிவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டபோது, காவல்துறையினர் சம்மனை ஒட்டிவிட்டு சென்றுவிட்டால், அதன்பின் எடுத்துவிடலாம் என தெரிவித்தனர்.

இதையடுத்து சம்மனை படிப்பதற்காக நான் தான் கிழிக்கச் சொன்னேன். பின்னர் படித்து கொண்டிருந்த போது திடீரென வீட்டின் முன்கதவு திறக்கப்பட்டு கூச்சலிடும் சத்தம் கேட்டது. காவலாளி அமல்ராஜ் முன்னாள் ராணுவ அதிகாரி ஆவார். ஆனால் அவரை குப்பை மாதிரி தூக்கி போட்டு கைது செய்து அழைத்து சென்றனர். நான் முதலில் காவலாளி தான் போலீஸை தள்ளி விட்டார் என்று நினைத்து தான் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர்கள் கைது அளவுக்கு கொண்டு செல்வார்கள் என நினைக்கவில்லை.

காவலாளி அமல்ராஜ் போலீஸாரை தள்ளவில்லை. அவர் கதவை திறந்தவுடன் போலீஸார் கதவை தள்ளிவிட்டு, அவரை கைது செய்தனர். இது முழுக்க முழுக்க திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் நாடகமாகும். வளசரவாக்கம் போலீஸார் ஒட்டி விட்டு சென்ற சம்மனை, நீலாங்கரை போலீஸார் ஏன் வந்து பார்க்க வேண்டும்? சம்மன் எங்களுக்கு தானே. அதை எடுத்து படிப்பதில் என்ன தவறு உள்ளது? அந்த சம்மனை நானே எடுத்திருப்பேன். ஆனால் இரவு உடையில் வெளியே வரமுடியாததால் பணியாளரை எடுக்க சொன்னேன்.

அதுதான் நான் செய்த தவறு. நான் தான் சம்மனை கிழிக்க சொன்னேன், எனில் போலீஸார் என்னிடம் பேசியிருக்கலாமே அல்லது என்னையே கைது செய்திருக்கலாமே? போலீஸார் கதவை தள்ளிவிட்டு வீட்டுக்குள் வரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? தொடர்ந்து பணியாளரை காவல் நிலையத்துக்கு அனுப்பவில்லை என்றால் படையை இறக்குவோம் என்றும் சொன்னார்கள்.

அதேபோல் காவலாளி அமல்ராஜ் துப்பாக்கிக்காக உரிமம் பெற்று வைத்திருப்பவர். தன்னிடம் ஆயுதம் இருக்கிறது என்பதை போலீஸாரிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லி, அவரே எடுத்து கொடுத்திருக்கிறார். ஆனால் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக வழக்கு போட்டுள்ளனர். நீலாங்கரை ஆய்வாளருக்கு எங்கள் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. அதனால் கைது செய்யப்பட்ட காவலாளி அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபா இருவரும் நேரடியாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. மாறாக ஒரு பூங்காவுக்கு அழைத்து சென்று அடித்திருக்கின்றனர். அதன்பின் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று இரும்பு ராடில் துணியை சுற்றி வைத்து இருவரையும் போலீஸார் அடித்துள்ளனர். எதற்கு காவல்துறை இவ்வாறு செய்ய வேண்டும்? அந்தளவுக்கு என்ன தப்பு செய்தார்கள் இருவரும்? சீமான் ஊரில் இல்லை என போலீஸாருக்கும் தெரியும். அதனால் வேண்டும் என்றே இதை செய்தனர்.

இரண்டு வாரமாக தொடர் பயணத்தில் இருக்கும் சீமான், ஒரு நாளில் 2 அல்லது 3 முறையாவது ஊடகங்களை சந்திக்கிறார். அவர் எங்கே இருக்கிறார் என எல்லாருக்குமே தெரியும். அவர் மீது எவ்வளவோ வழக்குகள் உள்ளன. அவர் என்ன ஓடியா போய்விட போகிறார். அத்தனையையும் நேர்மையாக அவர் எதிர்கொண்டு தான் வருகிறார். எங்களுக்கு சிறையை கண்டு பயமில்லை. இது முழுக்க முழுக்க காவல்துறை திட்டமிட்ட செய்த செயலாகும். காவல்துறை மீது அதிக மரியாதை இருக்கிறது. ஆனால் அவர்கள் இப்படி நடந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை. நீலாங்கரை போலீஸார் ஈகோவில் தால் அனைத்தையும் செய்திருக்கிறார்கள். சீமான் மீது எத்தனையோ வழக்குகள் இருக்கும்போது பாலியல் குற்றம், பாலியல் குற்றம் என தொடர்ந்து பேசி அசிங்க படுத்த வேண்டும் என்று தான் முயற்சிக்கின்றனர். அந்த பெண் எத்தனையோ நாளாக அதை பேசி வருகிறார். இந்த வழக்கில் பல குழப்பங்கள் உள்ளன. அதை காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.