தமிழகத்தில் ஒருபோதும் மொழிப்போர் நடக்கப் போவதில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“தமிழகத்தில் சிலர் மொழிப்போரை தூண்டுகின்றனர். அது தேவையில்லாத ஒன்று. அவர்களின் எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது. தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை. மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை” என்று, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் செங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் ‘மகாவிஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டர்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட இந்த நூலை ஆளுநர் ரவி வெளியிட்டார். தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் ஆர். என்.ரவி கூறியதாவது:-

சனாதன தர்மத்தை பாதுகாப்பதற்காகவே மகாவிஷ்ணு அய்யா வைகுண்டரின் அவதாரமாக வந்தார். இந்த காலகட்டத்துக்கு அய்யா வைகுண்டரின் சனாதன போதனைகள் மிக முக்கியமானவை. உலகில் பல்வேறு பகுதிகளில் போர் நடக்கும் சூழலில் அய்யா வைகுண்டரின் போதனைகள் மிக முக்கியமானவை. தற்போது சனாதனத்தின் தேவை அதிகமாக உள்ளது. உலகின் மிக முக்கியமான தலைவராக உயர்ந்திருக்கும் பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பல்வேறு கருத்துக்களை கொண்டவர்களாக இருந்தாலும் வேறு கட்சியை சார்ந்தவர்கள் பிற மாநிலங்களில் ஆட்சி செய்தாலும் அவர்கள் அனைவரையும் வேறுபாடு இன்றி தேவையான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக தமிழகத்தில் கருத்து வேறுபாட்டுடன் வேறு கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும் தேவையான நிதியை தமிழகத்துக்கு வழங்கி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் 77 ரயில் நிலையங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. தமிழ்மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் திருவள்ளுவர் பெயரில் மொழிக்கான இருக்கைகளை அமைத்து நிதி வழங்கி அங்கு தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளார்.

66 கோடி மக்கள் மகா கும்பமேளாவில் நீராடி உள்ளது சனாதனத்தின் மிகப்பெரிய சாட்சி. காசிக்கும் தமிழகத்துக்குமான உறவு, காசி தமிழ்ச் சங்கம் மூலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் தமிழகத்தில் சிலர் மொழிப்போரை தூண்டுகின்றனர். தற்போது மொழிப்போர் தேவையில்லாத ஒன்று . மேலும் ஒருபோதும் அது வெற்றி பெறாது. தமிழக மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் மக்கள் சுதந்திரமாக இல்லை. அவர்கள் விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் யாரும் மொழியை திணிக்கவில்லை. எதை படிப்பது என்பதை தேர்ந்தெடுக்க முடியாத சூழலில் குழந்தைகளும் இளைஞர்களும் தமிழகத்தில் இருக்கின்றனர். இங்கு இளைஞர்களின் வளர்ச்சிக்கு தடையும் அநீதியும் இழைக்கப்படுகிறது. பொய்களை பரப்புவதால் ஒருபோதும் மொழிப்போர் நடக்கப் போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.