திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு அருகே டெட்டனேட்டர் இருந்த நிலையில், வெடிகுண்டு தயாரிக்கும் போது பலியானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அடுத்து தமிழ்நாடு பயங்கரவாத எதிர்ப்பு படை விசாரணைக்காக களத்தில் இறங்கியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை மலை உச்சிப் பகுதிக்கு செல்லும் மலைப் பாதையில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகில் வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள Watch Tower உள்ளது. இதன் அருகே துர்நாற்றம் வீசியதால் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் வனத்துறைக்கும் திண்டுக்கல் தாலுகா காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் சிறுமலை வனத்துறையினர் மர்மமான முறையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் இருப்பதை பார்த்தனர். இதை அடுத்து அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்ததில் இறந்தவரின் உடல் அருகே பேட்டரி வயர்கள் கிடந்துள்ளது. காவல்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், கியூப் பிரிவு போலீசார், மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் நேரடியாக ஆய்வு செய்தார்.
மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் டெட்டனேட்டர் பயன்படுத்தும்போது ஏற்பட்ட விபத்தில் நபர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இவர் கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. எதற்காக இவர் கேரளாவிலிருந்து திண்டுக்கல் சிறுமலை பகுதிக்கு வந்தார்? டெட்டனேட்டரை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தினார்? வேறு ஏதும் தீவிரவாத சதி நடைபெற்றதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். உடல் முழுவதும் சிதைந்த நிலையில் இருந்ததால், அவர் பயன்படுத்தியது சக்தி வாய்ந்த வெடிபொருளாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு வெடித்து உயிரிழந்த நபர் கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த சிபு ஜான் என்பதும், 57 வயதான அவர் அப்பகுதியில் ஒரு வெடிகுண்டை தயாரித்துவிட்டு மற்றொரு வெடிகுண்டு தயாரிக்கும் போது எதிர்பாராத விதமாக வெடித்து சம்பவ இடத்திலேயே பலியானது தெரிய வந்தது. அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணைக்காக பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் களத்துக்கு விரைந்தனர். பயங்கரவாத எதிர்ப்புப் படை எஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் ஆய்வாளர் ஐரின் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டார். விசாரணை மற்றும் சோதனையின் அடிப்படையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, கொடைக்கானல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்துவது வழக்கம். இந்த நிலையில் தற்போது வெடிபொருட்களுடன் கேரளாவைச் சேர்ந்த நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் மாவோயிஸ்ட் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் நடமாட்டம் அதிகரித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. போலீசார் தற்போது விசாரணை நடத்தி வரும் நிலையில் அதற்கு பிறகு முழு தகவல்கள் தெரியவரும் என்கின்றனர்.