மொழியை வைத்து பிரிவினை அரசியலை இனியும் நடத்த முடியாது: வானதி சீனிவாசன்!

பிரிவினையை விதைப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். மொழியை வைத்து பிரிவினை அரசியலை இனியும் நடத்த முடியாது என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது:-

‘தேசிய கல்வி கொள்கை 2020’ நெகிழ்வுத் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. தாய்மொழி, ஆங்கிலம், மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு மொழியை படிக்கலாம் என்று கூறுகிறது. எந்த மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் திணிக்கவில்லை. இது நன்கு தெரிந்தும், தமிழ்நாட்டின் மீது, மத்திய இந்தி மொழியை திணிப்பதாக, இல்லாத ஒன்றை வலிந்து தினந்தோறும் தொண்டர்களுக்கு கடிதம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.

இப்போது, உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, ராஜஸ்தான் என இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு விட்டது என்று விஷமப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். இதற்கு திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும், இந்தி பேசும் மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் பதிலளிப்பார்கள் என நம்புகிறேன்.

அன்னியர்கள் ஆட்சி இங்கு வரும் வரை இந்திய மொழிகள் இணைந்தே பயணித்துள்ளன. மதம் மாற்றவும், வணிகத்திற்காகவும் வந்த ஐரோப்பியர்கள் இங்கே வந்த பிறகு, இந்தியர்களை பிளக்கும் கருவியாக மொழியை பயன்படுத்த தொடங்கினர். அயர்லாந்தில் இருந்து, மதம் மாற்றுவதற்காக தமிழ்நாடு வந்த கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் வாயிலாக ஆரிய – திராவிட இனவாதம் என்ற நஞ்சை தமிழ் மண்ணில் விதைத்தார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரால் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்ட ஆரிய – திராவிட இனவாதம் என்ற பொய்யில் பிறந்ததுதான் நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திமுக போன்றவை. எனவே, திமுக பிறந்ததே பிரிவினையில்தான். அதனால் எப்போதுமே இந்திய தேசியத்தை ஏற்காமல் பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கு தேசிய மொழி என்று எந்த மொழியும் இல்லை. இந்திய மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகள் என்றவர் ஆர்.எஸ்.எஸ். இரண்டாவது தலைவராக இருந்த குருஜி கோல்வால்கர். அதுதான் பாஜகவின் கொள்கை. பாஜகவைப் பொறுத்தவரை இந்திய மொழிகள் அனைத்தும் சமம். அதனால்தான் மூன்றாவது மொழியை தேர்வு செய்யும் உரிமையை அந்தந்த மாநிலங்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கியுள்ளது. ஆனால், இந்த உண்மையை திரித்து பாஜக அரசு இந்தியை திணிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிடுகிறார். இது தகவல் தொழில்நுட்ப யுகம். உண்மை எது என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் இருக்கும் மும்மொழி படிக்கும் வாய்ப்பு அரசு பள்ளிகளில் மட்டும் மறுக்கப்படுவது ஏன்?. தமிழ்நாடு அரசின் இருமொழி கொள்கை என்பது அரசு பள்ளிகளுக்கு மட்டும்தானா?. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்படுவது ஏன்?. முதலமைச்சர், அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகளின் குழந்தைகள் மட்டும் ஏன் மும்மொழிகள் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள்?. இருமொழி கொள்கையால்தான் தமிழ்நாடு வளர்ந்தது என்று திமுகவினர் பிரசாரம் செய்கிறார்கள். அப்படியெனில் மும்மொழி கொள்கையை பின்பற்றிய கர்நாடகம், ஆந்திரம், கேரளம், தெலுங்கானா, மகாராஷ்டிரம், கோவா, குஜராத், ஹரியாணா, டில்லி போன்ற மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தது எப்படி?

திராவிடம் திராவிட மாடல் என்று சொல்கிறது திமுக. ஆனால், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட மொழிகளை மூன்றாவது மொழியாக கற்ககூட மறுப்பது ஏன்?. தமிழ்நாடு அரசே உருது மொழி பள்ளிகளை நடத்தும்போது, திராவிட மொழிகளுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்?. மும்மொழி கொள்கையை பின்பற்றக்கூடிய பல மாநிலங்களில், அந்த மாநிலத்தின் தாய்மொழி 1 முதல் 10ம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கூட படிக்காமல் பள்ளிப்படிப்பை முடித்து விட முடியும் நிலை உள்ளதே ஏன்?. இதுபோன்ற பல கேள்விகளை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால் பதில் மட்டும் வரவில்லை. அதே நேரத்தில் இந்திய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பொய் பிரசாரம் செய்து வருகிறார். மொழியை வைத்து பிரிவினை அரசியலை இனியும் நடத்த முடியாது. பிரிவினையை விதைப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.