சீமானின் பேச்சு சமீப நாட்களாக சலசலப்புகளை கிளப்பி வருகிறது. இந்நிலையில், இவரது பேச்சை கேட்டுக்கொண்டு அக்கட்சியில் எப்படி இருக்கிறீர்கள்? என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், சென்னையில் மகளிர் அணி சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தன. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி இக்கேள்வியை எழுப்பியுள்ளார். செய்தியாளர் சந்திப்பின்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டின் முதலமைச்சர் அண்ணன் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மகளிர் அணி நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை கிழக்கு மாவட்டத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறுதியை, கழகத் தோழர்களுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாளும் அமைச்சர் சேர்கர்பாபு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மொழி பாதுகாப்பு, மற்றும் மாநில உரிமைகளை பாதுகாப்பது குறித்த உணர்வுகளை கழக உடன்பிறப்புகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் மனதில் ஏற்றுக்கொள்கிறார்கள். முதலமைச்சருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை உங்கள் வழியாக நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
ரயில்வே துறை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி, “ரயில் விபத்துகளை ஏற்படாமல் கவனித்தால் நாட்டிற்கு அது மிகுந்த பயனளிக்கும். மும்மொழி கொள்கையை திணிப்பது திராவிடர் கழகமோ அல்லது தலைவர் அண்ணன் ஸ்டாலினோ கிடையாது. மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை தரமாட்டோம் என்று அதிகாரத்தோடு சொல்லக்கூடியவர்கள்தான் இங்கே பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு என்றாலே ஒரு இளக்காரம்.. தமிழ்நாடு என்றாலே அவர்கள் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.. எனவே அந்த மக்களுக்கு எந்த திட்டமும் சென்று சேரக்கூடாது என்கிற எண்ணத்தில் செயல்படுவது தான் பிளவை ஏற்படுத்தும். தவிர உரிமைக்காக பேசுவது போராடுவதால் எந்த பிளவையும் ஏற்படுத்தாது” என்று கூறினார்.
இதனையடுத்து சீமான் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அவர் வீட்டில் இருக்கக்கூடிய பெண்களே இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். இதைவிட கேவலமாக பெண்களை அவதூறாக பேசுவதை கேட்டுக்கொண்டு, சகித்துக் கொண்டு எப்படி கட்சியில் இருக்கிறார்கள்? என எனக்கு தெரியவில்லை” என்று விமர்சித்திருக்கிறார்.