தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், முதல் திட்டமாக விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்துவோம் என திருச்சியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கூறினார்.
தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள பாகவதர் மணிமண்டபத்தில் பாஜக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கலந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக அரசின் அண்மைய நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து அவர் பேசுகையில், தமிழக முதல்வர் விஸ்வர்மா திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என கூறியுள்ளார். திமுகவினருக்கு அடிப்படை பொருளாதார விவகாரங்கள் புரிவதில்லை. தொழில் இல்லாமல் உலகம் இயங்காது என குறிப்பிட்டார்
தமிழக முதல்வர் ஸ்டாலின் விஸ்வகர்மா திட்டத்தை ஜாதியுடன் இணைத்து அதை தவறாக கொச்சைப்படுத்தி உள்ளார். இதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறோம். தமிழ்நாட்டில் 2026-ல் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், முதல் திட்டமாக விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் தேர்தலில் வெற்றி கண்ட கட்சியாக பாஜக திகழ்கிறது. தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சி அமைப்போம் என்று அவர் கூறினார்.
சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, தமிழகத்தில் தற்பொழுது ஆட்சியைப் பிடிப்பேன் என விஜய் கூறுவது கேலியாக உள்ளது. நடிகர் விஜயின் I’m waiting என்ற டயலாக் சினிமாவில் மட்டுமே பொருந்தும்.
விஜய் முதலமைச்சர் ஆவதற்கு இன்னும் 50 ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டும் என விமர்சித்தார்.
மும்மொழி கொள்கை என்றாலே இந்தி தான் என திமுகவினர் தவறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கையில், 5ம் வகுப்பு வரை தாய் மொழியில் தான் கல்வி கற்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதில் முதலமைச்சருக்கு என்ன ஆட்சேபனை உள்ளது என கேள்வி எழுப்பினார்.
தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாவதாக ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் உள்ளது. அதற்கு மாறாக இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பது என்பது அதன் அர்த்தம் இல்லை என்றும் தமிழை மற்ற மாநிலங்களில் திணிப்பது தான் எனவும் அவர் கூறினார்.
விஸ்வகர்மா சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதை நிறைவேற்றி தர முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இல்லை. ஆனால் பாஜக ஆட்சியில் 2026 இல் இக்கோரிக்கை மறுபரிசீலனை செய்யப்படும் என கூறினார்.