ஹரியானாவில் காங்கிரஸை சேர்ந்த இளம் பெண்ணின் உடல் சூட்கேஸில் மீட்பு!

காங்கிரஸ் கட்சியின் தொண்டரும், பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து நடைப்பயணம் மேற்கொண்ட 22 வயது இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அவரது உடல் சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலம் ரோதாக் மாவட்டம் சாம்ளா பஸ் நிலையத்தின் அருகே சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சென்று சூட்கேஸை கைப்பற்றினர். அப்போது சூட்கேஸ் அதிக எடையுடன் இருந்தது. சூட்கேசை திறந்து பார்த்தபோது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சூட்கேசில் இளம்பெண் ஒருவரின் உடல் இருந்தது. யாரோ அவரது கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்ததும், உடலை சூட்கேஸில் வைத்து வீசி சென்றதும் தெரிவந்தது. இதையடுத்து அந்த பெண் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண்ணின் கையில் மெஹந்தி போடப்பட்டு இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ஹிமானி நார்வால் (வயது 22) என்பதும், அவர் ரோதாக்கின் விஜய்நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதும், பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து அவர் நடைப்பயணம் மேற்கொண்டதும் தெரியவந்தது. ராகுல் காந்தியுடன் அவர் சிரித்தபடி கைகோர்த்து நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிஜிஐஎம்எஸ் ரோதாக் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி சாம்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தை கேட்டு ராகுல் காந்தி கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தி்ல், ‛‛ஹரியானா மாநிலம் ரோதாக்கை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பெண் தொண்டர் ஹிமானி நார்வால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்துக்கு இழப்பை தாங்கும் சக்தியை கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். இந்த இக்கட்டான சூழலில் அவரது குடும்பத்துடன் காங்கிரஸ் கட்சி நிற்கும். இந்த கொடூரமான கொலையில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது கொலை செய்யப்பட்டுள்ள ஹிமானி நார்வால் ஹரியானா ராகுல் காந்தி மட்டுமின்றி முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹுடாவின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான தீபேந்தர் சிங் ஹுடா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ பிபி பாத்ரா ஆகியோரின் தீவிர ஆதரவாளர். அவர்களுடன் எடுத்து கொண்ட போட்டோக்களை ஹிமாஜி நார்வால் அதிகமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.