நான் செப்பல் போடாமல்தான் இருக்கிறேன், வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிவிட்டு மோசடி செய்து ஜெயிலுக்கெல்லாம் போகவில்லையே என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்களுக்கு காலையில் எழுந்ததும் என்னை திட்டுவது தான் முதல் வேலை. யார் அதிகமாக திட்டுவது என்பது தான் அவர்களுக்குள் போட்டி. மேடையை போட்டு பிரதமரை திட்டுவது, பாஜகவை திட்டுவது மட்டுமே முழுநேர வேலையாக திமுகவினர் வைத்துள்ளனர். இதனால் தான் சட்ட ஒழுங்கிலிருந்து அனைத்தும் தமிழகத்தில் சந்தி சிரிக்கிறது.
நான் செப்பல் போடாமல்தான் இருக்கிறேன். வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிவிட்டு யாரையும் மோசடி செய்து ஜெயிலுக்கு செல்லவில்லையே.. ஜெயிலுக்கு செல்வதும், மீண்டும் அமைச்சர் பதவியில் அமருவதுதான் தவறு. இது குறித்து உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்பியது. மேடை போட்டு பாஜகவை திட்டுவதுதான் திமுகவின் முழு நேர வேலையாக இருக்கிறது. அனைத்து கட்சி கூட்டம் எதற்கு? ஏன் என்றே தெரியாமலேயே எப்படி பங்கேற்க முடியும்? தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறையாது. இதில் கூட திமுக அரசியல் செய்கிறது. திமுகவினருக்கு மக்கள் பிரச்சினை குறித்து எந்த கவலையும் இல்லை.
தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் பொழுது தமிழகத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் வராது. தொகுதி மறுவரையறை என்பது விகிதாச்சார அடிப்பைடயில் மேற்கொள்ளப்படும், என பிரதமரும், உள்துறை அமைச்சரும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு சட்ட ஒழுங்குக்காக முதல்வர் கூட்டினால், நாங்கள் அறிவாலயம் வாசலிலிருந்தே தலைமைச் செயலகத்திற்கு செல்லவோம்.
இலங்கையின் புதிய அதிபர் வந்த பிறகு கைதுகள் அதிகரித்துள்ளது. மீனவ பிரச்சினையை சட்டம் ஒழுங்காகவோ, எல்லை பிரச்சினையாகவோ அணுகாமல் மனிதாபிமான பிரச்சினையாக அணுக வேண்டும், என்றே இந்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறது. மீனவர் பிரச்சினை தொடர்பாக நான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்திற்கு, அவர் எழுதிய பதில் கடிதத்தில் இந்தியா-இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் நடைபெறும், என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
மேலும், இருமொழிக் கொள்கையில் படித்து ஐபிஎஸ் ஆனதை அண்ணாமலை மறந்துவிட்டாரா? என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அண்ணாமலை, “நான் படித்த பள்ளியில் மூன்று மொழிகள் இருந்தன. நான் தாய் மொழி தமிழை எடுத்து படித்தேன். 26 வயதில் கன்னடமும், இந்தியும் கற்றுக் கொண்டேன். தற்போது தெலுங்கு கற்றுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
முன்னதாக கோவை சின்னியம்பாளையம் பகுதியில் பெரியார் தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கோவை எப்போதுமே பெரியார் மண், திராவிட மண் என்பதை மக்கள் நிரூபித்துள்ளார்கள். கோவையில் ஒரு சட்டமன்றத் தேர்தலில் வென்றுவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெல்லலாம் என நினைத்தார்கள். ஆனால் சட்டசபை தேர்தலில் உள்ளூரிலேயே விலை போகாத ஒரு ஆடு, நாடாளுமன்றத் தேர்தலில் வெளியூர் சந்தைக்கு வந்து விலை போகுமா என வந்தார்கள். தம்பி. இந்த ஊரும் பெரியார் மண்தான். உங்களுக்கு அங்கேயும் வேலையில்லை, இங்கேயும் வேலையில்லை. தமிழகத்தில் இனி எங்கேயும் வேலையில்லை என கூறிவிட்டனர். உலகத்திலேயே தான்தான் அறிவாளி என நினைத்துக் கொண்டு தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு ஊர் மக்கள் நாட்டு மக்கள் அடிப்பதற்கு முன் நானே என்னை அடித்து கொள்கிறேன் என வீடியோ எடுத்து வெளியிட்டார். சாட்டையால் அடித்ததோடு மட்டுமல்லாமல் செருப்பு போட மாட்டேன் என சவால் விட்டார். தமிழகத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. இனி வாழ்நாள் முழுக்க உங்களால் செருப்பே போட முடியாது. கொஞ்சம் யோசித்து சபதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.