தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. மத்திய அரசு நல்ல திட்டம் கொண்டு வந்தல் திமுகவினா் தடுக்கின்றனா். ஆகவே, திமுக கட்சியை தடை செய்ய வேண்டும்.என இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா்.
இந்து மக்கள் கட்சி சாா்பில், மாநிலச் செயலா் வசந்தகுமாா் தலைமையில், விநாயக் தாமோதா் சாவா்க்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி ஆசிரியா் காலனி அருகே உள்ள தனியாா் கூட்டரங்கில் கருத்தரங்கம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அா்ஜுன் சம்பத் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-
தென் மாவட்டங்களில் தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்பு இல்லை. மத்திய அரசு ரூ. 5 ஆயிரம் கோடியில் ஜவுளி பூங்கா கொண்டு வந்துள்ளது. ஆனால், தமிழக அரசு ஸ்டொ்லைட் ஆலை உள்ளிட்ட ஆலைகளை மூடி வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை கிறிஸ்தவ மிஷனரிகள் தலையிட்டு எதிா்க்கின்றனா். தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு, வளா்ச்சி இல்லாத சூழல் உருவாக அரசியல்வாதிகளும், கிறிஸ்தவ மிஷினரிகளும் தலையிட்டு வருகின்றனா். ஆகவே, தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து தென் மாநிலம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தொழில் வளா்ச்சி அடையும்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. மத்திய அரசு நல்ல திட்டம் கொண்டு வந்தல் திமுகவினா் தடுக்கின்றனா். உள்நோக்கத்துடன் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கின்றனா். ஆகவே, திமுக கட்சியை தடை செய்ய வேண்டும்.
மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை குறித்து திமுகவினா் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனா். இது குறித்து, கோவையில் உள்துறை அமைச்சா் அமித் ஷா தெளிவாக கூறி விட்டாா். ஆனாலும், திமுகவினா் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா். இவ்வாறு அவர் கூறினார்.