தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கையை கைவிடக்கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொகுதிகளை ஏலம் விடுவதற்கான திறந்தவெளி பரப்புரிமை கொள்கை அறிவிப்பினை 11.02.2025 அன்று தொடங்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் காவிரி படுகையில் CY-DWHP – 2024/1 என்ற தொகுதி பெயரில் 9990.96 சதுர கிமீ பரப்பளவும் அடங்கும். இது மன்னார் வளைகுடா உயிர் கோளக் காப்பகத்திற்குள்ளும், பாக் விரிகுடா மற்றும் வாட்ஜ் கரைக்கு அருகிலும் உள்ளது. மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்காவை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா கடற்பகுதி, உயிர் கோளக் காப்பகமாக மத்திய அரசால் 18.02.1989 அன்று அறிவிக்கப்பட்டது. இது பவளப்பாறைகள், கடல் புல் படுகைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், சேற்று படுகைகள், தீவுகள் மற்றும் காடுகள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கிய வளமான பல்லுரியிர் பெருக்கத்தை கொண்டுள்ளதை பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த உயிர் கோளக் காப்பகம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்கு மாவட்டங்களின் கடற்கரையிலிருந்து 500 சதுர கி.மீ பரப்பளவில், பரந்து விரிந்து கிடக்கும் 21 தீவுகள் மற்றும் அருகிலுள்ள பவளபாறைகளின் சங்கிலியை கொண்டுள்ளது. இது பல்வேறு வகையான கடல் விலங்கினங்களின் புகலிடமாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு செப்டம்பர் 2021ல் பாக் விரிகுடாவில் மிக அரிதான கடற்பசு இனத்தை பாதுகாக்கும் வகையில், இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை அறிவித்தது. இது தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோர பகுதியில் 448 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கியது. இந்த பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கான ஆழ்துளை எரிவாயு கிணறுகள் என்பது எளிதில் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பு, அவற்றின் வளமான பல்லுயிர் பெருக்கம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும். கடலின் ஒட்டுமொத்த பாதுகாப்பினையும் சீர்க்குலைக்கூடும்.
வண்டல் படிவுகள், நச்சுக் கழிவுகள் வெளியேற்றம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் அழிவு போன்ற அபாயங்கள் மட்டுமின்றி, மன்னார் வளைகுடாவை தங்கள் வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். மத்திய அரசின் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கைகளால் ஏற்படும் இதுபோன்ற எந்தவொரு இடையூறும், முழு கடலோர பகுதியையும் பாதிப்படைய செய்யும். இது கடலோர சமூகங்களிடையே பெருத்த அச்சத்தை உருவாக்கி உள்ளது.
துரதிர்ஷ்டவசமாக இந்த ஏல அறிவிப்புக்கு முன்பாக மத்திய அரசு தமிழ்நாடு அரசிடம் கருத்து எதையும் கேட்கவில்லை. உரிய ஆலோசனை கேட்கப்பட்டிருந்தால் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் சார்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு இருக்கும். எனவே இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் இந்த ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைப்பதற்கான ஏல முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட அனைத்து பல்லுயிர் நிறைந்த பகுதிகளையும் OALP-யில் இருந்து நீக்க வேண்டும். எளிதில் பாதிக்கப்படக்கூடிய பாதுகாக்கப்பட்ட இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதை கருத்தில் கொண்டு இந்த முக்கியமான பிரச்சனையில் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.