தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக அதிமுக கூறியிருக்கிறதா, போய் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை பாருங்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறதே அது உண்மையா என கேட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக எங்காவது அப்படி சொல்லியிருக்கிறதா, தேவையின்றி யார் யாரோ சொல்லியிருப்பதை எல்லாம் எங்களிடம் கேட்காதீர்கள். அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை மட்டும் பாருங்கள் என தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி சென்னையில் நடந்த விழாவின் போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா சீட்டுக்கான தேர்தல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பிரேமலதா, அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைந்த போதே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டது. அந்த தேர்தல் வரும் போது எங்கள் கட்சியில் இருந்து யாரை டெல்லிக்கு அனுப்பப் போகிறோம் என்பதை அறிவிப்போம் என தெரிவித்திருந்தார். பிரேமலதா இப்படி கூறும் நிலையில் இதுவரை மறுப்பு தெரிவிக்காத அதிமுக, இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது மறுத்துள்ளது. எனவே வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிகவை ஓரங்கட்டிவிட்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வழிவகை செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே வேளையில் பாஜகவுடன் கூட்டணியா என கேட்ட போது, சிடுசிடுத்த எடப்பாடி, இன்னும் 6 மாதங்கள் கழித்து இந்த கேள்வி கேளுங்கள் என தெரிவித்திருந்தார். இதுவரை பாஜகவுடன் கூட்டணியா என யார் கேட்டாலும், “இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது” என கூறி வந்த நிலையில் தற்போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் என எப்போது அதிமுக கூறியது என கேட்கிறார். எனவே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் குறித்து எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் ஏதேனும் இருக்கிறதா என்பதை இனி பிரேமலதாதான் தெளிவுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வாய்மொழி உத்தரவா என்பதையும் அவர் விளக்க வேண்டும். அப்போதுதான் இந்த சலசலப்பு அடங்கும்.