ஆரியர் பற்றி தவறான கருத்தை திணிக்க முயற்சித்தார் பெரியார்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஆரியர்கள் பற்றிய தவறான கருத்தை தமிழகத்தில் திணிக்க முயற்சித்தார் பெரியார். உண்மையில், ‘ஆரியர் – திராவிடர் வெவ்வேறு இனம்’ என்பது ஒரு பொய். அது கடந்த 60-70 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட, பரப்பப்பட்ட கதை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் சமூகவியல் துறை மற்றும் தென்னிந்திய ஆய்வுகளுக்கான மையம் சார்பில் ‘சிந்து நாகரிகம் – மக்கள் மற்றும் தொல்பொருளியல் மீதான பார்வை’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

சிந்து நாகரிகம் மிகவும் பழமையானது. எனக்கு தெரிந்து, மற்ற நாகரிகங்களைவிட மிக அதிக அளவில் வன்முறைக்கு உள்ளான நாகரிகம் அது. சிந்து நாகரிகத்தின்மீது முதல் தாக்குதலை நடத்தியவர்கள் ஐரோப்பியர்கள். 1800-களில் முழு உலகையும் ஐரோப்பா காலனித்துவம் செய்தது. அப்போது உலகில் வெள்ளை, மஞ்சள், கறுப்பு ஆகிய 3 இனங்களில் வெள்ளை இனம்தான் உயர்ந்தது என நிற அடிப்படையில் பாகுபாடு இருந்தது. வின்ஸ்டன் சர்ச்சில் மற்ற இனத்தவர்களை நாய்கள்போல கருதினார்.

ஏகாதிபத்தியத்தையும், உலகின் மீதான தனது கட்டுப்பாட்டையும் நியாயப்படுத்திய ஐரோப்பியர்களின் கட்டாயத்தால் ‘ஆரியம் என்பது ஓர் இனம்’ என்ற தவறான கருத்து பரப்பப்பட்டது. அதுவரையில், ‘ஆரியம்’ என்பது எங்குமே ஓர் இனமாக குறிப்பிடப்பட்டது இல்லை. சங்க இலக்கியங்களோ, வேத இலக்கியங்களோ ஆரியம் என்ற சொல்லை இனமாக பயன்படுத்தியது இல்லை. 2,500 ஆண்டுகளுக்கும் மேலான நமது தமிழ் இலக்கியங்கள்கூட ஆரியர் என்ற சொல்லை ஓர் இனமாக பயன்படுத்தவில்லை. ஆசிரியர்கள், சிறந்தவர்கள் என்பதை குறிப்பிடவே ஆரியர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், ஆரிய இன பாகுபாட்டை காட்டியவர் மேக்ஸ் முல்லர். ‘ஆரியர் – திராவிடர் வெவ்வேறு இனம். இந்தியா மீது ஆரியர் படையெடுத்தனர்’ என்பதெல்லாம் கடந்த 60-70 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட, பரப்பப்பட்ட கதை. நம்மில் பலரும் அதை உண்மை என்று நினைக்கின்றனர். ஆரியர்களை ‘வந்தேறிகள்’ என்று தவறாக சித்தரித்தார் ஈ.வெ.ராமசாமி (பெரியார்). அந்த கருத்தை தமிழகத்தில் திணிக்க முயற்சித்தார். ஆரியர்கள் பற்றி முழுமையாக தெரியாமல் தமிழகத்தில் சில நூல்களை எழுதியுள்ளனர். நச்சு விதையை விதைக்கின்றனர். உண்மையில், ஆரியர் – திராவிடர் வெவ்வேறு இனம் என்பது ஒரு பொய்.

மகாபாரதத்தில் சரஸ்வதி நதி பற்றி சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிந்து நாகரிகம் என்பதை சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று கூறவேண்டும். அமைதி, ஒற்றுமையை சிந்து சரஸ்வதி நாகரிகம் வலியுறுத்துகிறது. தமிழும், சம்ஸ்கிருதமும் இந்தியாவின் மிகவும் பழமையான மொழிகள். ‘அனைவரும் சமம். அனைவரும் ஒரே குடும்பம்’ என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இங்கு மொழிவாரியாக நாம் பிரிக்கப்பட்டுள்ளோம். இது ஒற்றுமைக்கு எதிராக உள்ளது. இவ்வாறு ஆளுநர் பேசினார்.