எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத் தலைவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது, பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத் தலைவர் ஃபைசி அவர்களை அமலாக்கத்துறை மூலம் கைது செய்து, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ள பாஜக அரசின் எதேச்சதிக்காரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
தன்னாட்சி அமைப்புகளைத் தனது கைப்பாவையாக மாற்றி சனநாயக அமைப்புகளையும், இயக்கங்களையும் அச்சுறுத்தி, அழித்தொழிக்கும் முயற்சியில் பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருவது நாட்டினைப் பேரழிவினை நோக்கி இட்டுச்செல்லவே வழிவகுக்கும்.
இதுபோன்ற அதிகார அடக்குமுறைகளை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு இனியேனும் நிறுத்திக்கொண்டு, அதலபாதாளத்திற்குப் போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும், அதிகரித்துள்ள வேலையில்லா திண்டாடத்தைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
ஆகவே, அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத்தலைவர் ஃபைசி அவர்கள் மீதான கைது நடவடிக்கையைக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.