ஹிந்தி எதிர்ப்பு என்கிற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தி அரசியல் செய்து வரும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு செய்த சேவைகள் என்ன? மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று தமிழக மக்களுக்கு பதிலளிக்கத் தயாரா? என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தென்னிந்தியர்கள் ஹிந்தியை கற்க பல இடங்களில் ஹிந்தி பிரச்சார சபா உள்ளது. தென்னிந்திய மொழிகளை கற்றுக்கொள்ள வட இந்தியாவில் தமிழ் பிரச்சார சபா உள்ளதா? தமிழ் பிரச்சார சபாவையோ, திராவிட பாஷை சபாவையோ நிறுவ முடிந்ததா? இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தை முரசொலியில் வெளியிட்டு கேள்வி எழுப்பி இருப்பதை ஊடக செய்திகள் மூலமாக அறிய முடிகிறது.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தித்தான் தமிழகத்தில் 1967ல் திமுக ஆட்சிக்கு வந்தது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 57 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு கேள்வியை திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன் வைப்பது நகைப்பாக இருக்கிறது. ஜவகர்லால் நேரு காலத்தில் ஹிந்தியை கட்டாய பாடத்திட்டமாக்கிய காங்கிரஸை எதிர்த்துத் தான் திமுக ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை தமிழகத்தில் நடத்தியது. அன்று ஹிந்தியை திணித்த அதே காங்கிரஸோடு இன்று திமுக கூட்டணி வைத்திருப்பது வெட்கக்கேடு இல்லையா? 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 57 ஆண்டுகளில் தமிழகத்தில் திமுக ஆறு முறை ஆட்சி செய்துவிட்டது. அதில் 2 ஆண்டுகள் திமுகவின் நிறுவனரான திரு.அண்ணாதுரை அவர்களும், அவருடைய மறைவுக்குப் பின் திமுக தலைவராக ஐம்பது ஆண்டுகளும், திமுக ஆட்சியில் ஐந்து முறை தமிழக முதல்வராகவும் இருந்தவர் திரு.மு.கருணாநிதி அவர்கள் தானே.. அவர் ஏன் பிற மாநிலங்களில் தமிழ் பிரச்சார சபா தொடங்க முயற்சிக்கவில்லை? தன் மகள் கனிமொழியின் அரசியல் வளர்ச்சி மீது திரு.கருணாநிதி அவர்களுக்கு இருந்த அக்கறை தமிழ் மொழியின் வளர்ச்சி மீது ஒரு சதவீதம் கூட அவருக்கு இல்லை என்பதுதான் உண்மையான காரணம்.
திமுக ஆளுங்கட்சியாக இருந்த காலங்களில் தமிழ் மொழியை வளர்க்க எந்தவிதமான நடவடிக்கையும் மேள்கொள்ளாமல் மாறாக அரசியல் நடத்துவதற்காக ஹிந்தி எதிர்ப்பு என்கிற கோஷத்தை வைத்து அரசியல் செய்து வந்தது. ஆனால் மத்தியில் 15 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த காலங்களில் பிற மாநிலங்களில் தமிழ் பிரச்சார சபாவை நிறுவ எந்த முயற்சியும் மேற்கொள்ளாததன் காரணம் என்ன என்று திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிலளிப்பாரா? என்கிற கேள்வியை நான் மக்களின் பார்வைக்கு முன் வைக்கிறேன். மத்தியில் 15 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு கிடைத்த போது தன் குடும்ப உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சரவையில் அதிகாரமும், அதிக வருமானமும் கிடைக்கும் துறைகளை கேட்டுப் பெறுவதில் திரு.மு.கருணாநிதி அவர்களில் காட்டிய முனைப்பில் ஒரு சதவீீதம் கூட செம்மொழியான தமிழ் மொழியை வளர்க்க தமிழ் பிரச்சார சபாவை பிற மாநிலங்களில் நிறுவுவதற்காக முன்னெடுக்கவில்லை.
மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் தனது பேரன் தயாநிதி மாறனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியை பிடிவாதமாக பெற்றுத் தந்து பல மாநிலங்களில் பல மொழிகளில் சன் தொலைக்காட்சி சேனல்களை நிறுவ கலாநிதி மாறனுக்கு வழிவகுத்துத் தந்த திரு.மு.கருணாநிதி அவர்கள் ஏன் பல மாநிலங்களில் தமிழ் பிரச்சார சபாவை நிறுவ தனது மத்திய ஆட்சியின் அதிகார பகிர்வை பயன்படுத்தவில்லை என்பதற்கு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிலளிப்பாரா?
தமிழ் படிக்காதே, தமிழில் பேசாதே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதே, சனியன் தமிழை விட்டொழி என தமிழ்மொழியை வாழ்நாள் முழுவதும் நிந்தித்து திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் நூல்களை அச்சேற்ற முடியாத ஆபாச வார்த்தைகளில் விமர்சித்த ஈவெராவுக்கு திமுக ஆட்சியில் இருந்த காலங்களில் தமிழகம் முழுவதும் சிலை வைத்ததில் காட்டிய அக்கறையை. மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த போது அந்த கூட்டணி ஆட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி திமுகவின் முன்னணி தலைவர்கள் பன்மொழி கற்பிக்கும் CBSE பள்ளிகளை தமிழகம் முழுவதும் நிறுவ எடுத்த முயற்சியை.. ஏன் அந்த காலகட்டத்தில் தமிழ் பிரச்சார சபாவை பிற மாநிலங்களில் உருவாக்கும் முயற்சியை திமுக மேற்கொள்ளவில்லை? ஹிந்தி எதிர்ப்பு என்கிற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தி அரசியல் செய்து வரும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு செய்த சேவைகள் என்ன? மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று தமிழக மக்களுக்கு பதிலளிக்கத் தயாரா?
குஜராத்தி மொழியை தாய்மொழியாகக் கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பாரத பிரதமராக பொறுப்பேற்ற பிறகு கடந்த பதினோறு ஆண்டுகளுக்குள் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உலகின் ஆறு நாடுகளில் திருவள்ளுவர் கலாச்சார மையத்தை நிறுவியுள்ளார். மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டு பாரதியார் பெயரில் காசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் அங்கு தமிழ் மொழி கற்பிக்க பாரதியார் பெயரில் ஒரு இருக்கை அமைத்துள்ளார். உலகின் முதல் ஆன்மீக, கலாச்சார, புராதன நகரமான காசியில் தமிழ் மொழியை உலகெங்கும் முன்னெடுத்துச் சொல்லும் உயர்ந்த நோக்கத்தோடு 2022 ஆம் ஆண்டு முதல் காசி தமிழ் சங்கத்தை தொடர்ந்து இதுவரை மூன்று முறை நடத்தி தமிழ் மொழியை வட மாநிலங்களுக்கும் கொண்டு சென்றிருக்கிறார். வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என வள்ளுவரின் பெருமையும், திருக்குறளின் மேன்மையையும் திமுக உதட்டளவில் 60 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதை உலகளவில் வரலாற்றில் பதிவு செய்யும் பொருட்டு வள்ளுவரையும், திருக்குறளையும் உலகெங்கும் வாழும் மக்கள் அறிந்துகொள்ள வழிவகை செய்யும் பொருட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் ஆணைக்கிணங்க மத்திய பாஜக அரசு திருக்குறளை 100 மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
மேலும் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையிலே உரையாற்றும் போதும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதும் உலகின் எந்த தேசத்திற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் அந்த நாட்டின் அரசியல் சபையில் உரையாற்றும் போதும், அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றும் போதும் தெய்வப்புலவர் திருவள்ளுவர், மகாகவி பாரதியார், கலியன் பூங்குன்றனார் போன்ற தமிழ் வளர்த்த சான்றோர்களின் உரையை மேற்கோள் காட்டிப்பேசி தொன்மையான தமிழ் மொழியின் பாரம்பரிய பெருமையையும், பண்பாட்டு செழுமையையும் அனைவரும் அறிய வேண்டும் என்கிற பேரார்வத்தை உலக மக்கள் அனைவருக்கும் உருவாக்கி வருகிறார்.
திமுக ஹிந்தி எதிர்ப்பு என்கிற ஒற்றை பிரச்சாரத்தை முன்வைத்து பிரெஞ்சு, உருது உள்ளிட்ட அந்நிய மொழிகளை தமிழகத்தில் சத்தமில்லாமல் ஒரு பக்கம் திணித்து வருகிறது. ஆனால் பாஜகவோ பாரத மொழிகள் அனைத்தும் காக்கப்பட வேண்டும்! நாடு முழுவதும் வளர்க்கப்பட வேண்டும்! பாரம்பரிய மொழிகள் அனைத்தும் போற்றப்பட வேண்டும்! பாரத மொழிகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும்! அனைத்து மொழிகளும் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்! என்கிற நோக்கில் அந்தந்த மாநிலங்களில் தாய்மொழிக்கு முக்கியத்துவமும், பிரதிநிதித்துவமும் அளிக்கப்பட வேண்டும்! என்கிற நோக்கத்தையே தேசிய கல்விக்கொள்கை 2020 மூலம் உறுதி செய்திருக்கிறது. பாரத மொழிகள் அனைத்தும் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் வரலாற்றிலும், மானுட வாழ்வியலிலும் அவை நீக்கமற நிறைந்திருக்க வேண்டும். இன்னும் பல யுகங்களுக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.