முல்லை பெரியாறு அணையில் மார்ச் 22-ம் தேதி தேசிய அணைகள் பாதுகாப்பு குழு ஆய்வு!

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முதல் ஆய்வு வரும் 22-ம் தேதி முல்லை பெரியாறு அணையில் நடைபெற உள்ளது.

முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் 2014-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், பேபி அணையைப் பலப்படுத்தவிடாமல் கேரள அரசு இடையூறு செய்து வருகிறது. 2024 அக். 1-ம் தேதி இந்த அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான இக்குழுவில், தமிழக நீர்வளத் துறைச் செயலர் மங்கத்ராம்சர்மா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலர் விஸ்வாஸ், நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் என 7 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

7-ம் தேதி இக்குழு அணையை ஆய்வு செய்வதாக இருந்த நிலையில், 22-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக் குழு அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ஆய்வு இதுவாகும். அணை தொடர்பான பிரச்சினைகளுக்கு 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து பெரியாறு, வைகைப் பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் கூறும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டும். மழை நேரங்களில் தரைப்பாதையில் வல்லக்கடவு வழியே அணைக்குச் செல்ல முடியாது என்பதால், தமிழக படகுகளைத் தடையின்றி இயக்க அனுமதிக்க வேண்டும். அணை குறித்த கேரளாவின் விஷமப் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆய்வு நடைபெறுவதற்கு முந்தைய நாளில் (மார்ச் 21) கம்பத்தில் இருந்து குமுளிக்கு பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

தமிழக தேசிய விவசாயிகள் சங்க தேனி மாவட்டத் தலைவர் சீனிராஜ் கூறும்போது, “அணைக்குள் கேரள போலீஸார் இருப்பதால், தமிழக அதிகாரிகள் செல்வதில் சிரமம் இருக்கிறது. எனவே, மத்திய ஆயுதப்படைக் காவலர்களை பாதுகாப்புப் பணியில் நியமிக்க வேண்டும். நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.