இந்தியா முழுவதும் புரட்சி வெடிக்கும்: பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை!

ஜெக்ஜித் சிங் டல்லேவால் உயிருக்கு எதுவும் நேர்ந்தால் இந்தியா முழுவதும் புரட்சி வெடிக்கும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப்-அரியானா மாநில எல்லையான கணூரி பார்டரில் சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்ஜித் சிங் டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை 2024, நவம்பர் 26-ந்தேதி முதல் மேற்கொண்டு வருகிறார்.

சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் ஜெக்ஜித் சிங் டல்லேவால் இன்றுடன் (5-ந்தேதி) 100 நாட்களை எட்டியுள்ளது. இவரது போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசு உடனடியாக நீதி வழங்க கோரியும், சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பு சார்பில் தஞ்சை ரெயிலடியில் இன்று (புதன்கிழமை) காலை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை தொடங்கி வைத்து சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளை தற்கொலையில் இருந்து பாதுகாக்க வேண்டும், இதனை வலியுறுத்தி சண்டிகரில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்ஜித் சிங் டல்லேவால் தலைமையிலான விவசாயிகள் பேரணியை அரியானா மாநில எல்லையில் துணை ராணுவப்படை தடுத்து நிறுத்தியது.

அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 7 விவசாயிகள் உயிரிழந்தனர். ஆனாலும், தொடர்ந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டரை கொண்டு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்ஜித் சிங் டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார். போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ளது.

இதற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் 100 இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தில் தஞ்சையில் விவசாயிகள் அனைவரும் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு தற்போது சிகிச்சையில் இருக்கும் ஜெக்ஜித் சிங் டல்லேவால் உயிருக்கு எதுவும் நேர்ந்தால் இந்தியா முழுவதும் புரட்சி வெடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.