திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டம் குறிக்கோளற்றது எனவும், அது எந்த பலனும் இல்லாதது எனவும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
பாஜக மாநில மையக்குழு கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன் பங்கேற்றனர்.
தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக முன்னெடுக்கும் கையெழுத்து இயக்கம், புதிதாக தொடங்கப்பட இருக்கும் ‘சமக்கல்வி’ இணையதள பணிகள், 2026 பேரவைத் தேர்தல், பாஜகவின் களப்பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியதாவது:-
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுபற்றி தேர்தல் ஆணையமும் எதுவும் குறிப்பிடவில்லை. நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் குடியரசு தலைவர் பேசும்போது தொகுதிகள் சீரமைப்பு குறித்து எதையும் அறிவிக்காத நிலையில் முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுகிறார்.
மத்திய அரசை எதிர்க்கும் விதமாக, அரசியல் ஆதாயம் தேடும் வகையில் இந்த கூட்டம் கூட்டப்படுகிறதே தவிர, அதற்கான காரணம் தெளிவாக இல்லை. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை விட தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள 1,600 மேற்பட்ட பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைஒற்றை இலக்கில்தான் உள்ளது. இதற்கெல்லாம் தீர்வு தேசிய கல்விக் கொள்கையில் உள்ளது.
ஆனால், அதை மறைத்து தேசிய கல்விக் கொள்கையை மும்மொழிக் கொள்கை எனக்கூறி, அதில் இந்தி திணிப்பு என்ற பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். எந்த மாநிலமும் அதன் விகிதாச்சார அடிப்படையில் பாதிக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவாக சொல்லியிருக்கிறார். எனவே, திமுக சார்பில் நடத்தப்படும் அனைத்துக் கட்சி கூட்டம் எந்த பலனும் இல்லாதது. இவ்வாறு அவர் கூறினார்.
பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “மத்திய அரசுக்கு எதிராகபோராடுவதற்கு தயாராக கூடிய ஒரு கூட்டமாகத்தான் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகின்றனர். ஒரு கிளர்ச்சிக்கு அனைவரையும் தயாராக்குகின்றனர். 1962, 1967 காலகட்டத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு என்னென்ன தந்திரங்களை கடைபிடித்தார்களோ, அதே தந்திரங்களை மீண்டும் கடைபிடித்து, ஒரு மிகப்பெரிய போராட்டத்தை திணிப்பதற்காக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது” என்றார்.