மக்காச்சோளத்துக்கு விதித்த செஸ் வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்: தமாகா!

“மக்காச்சோளத்துக்கு விதித்துள்ள செஸ் வரியை தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும்” என்று தமாகா பொதுச் செயலாளர் எம்.யுவராஜா வலியுறுத்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மக்காச்சோளத்துக்கு 1 சதவீத சந்தை வரியை, வேளாண் விற்பனைத்துறை மூலம் விதித்திருப்பது, அவர்களைக் கடும் அதிருப்திக்கு ஆளாக்கி இருக்கிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் மக்கள் நலனுக்காக எதையுமே செய்யவில்லை. விலைவாசி பன்மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, தொடர்ந்து சிமெண்ட், செங்கல், மணல், ஆவின் பால் விலை, என பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களை அவதியில் ஆழ்த்தியுள்ளார்கள்.

வரலாறு காணாத நூல் விலை ஏற்றத்தால் தமிழகத்தில் ஜவுளித்துறை மோசமான சூழ்நிலையை சந்தித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போதைப் பொருட்கள் அதிகரிப்பு போன்றவைகள் தலைவிரித்தாடுகிறது. தற்போது ஆணிவேரையே அசைக்கும் விதமாக விவசாயிகளின் அடிமடியில் கைவைத்துள்ளனர். தமிழகத்தில் 40 விதமான வேளாண் விளைப்பொருட்களுக்கு ஒரு சதவீதம் செஸ் எனப்படும் சந்தை வரி விதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண் பொருட்களுக்கு அதன் விற்பனை மதிப்பில் 1 சதவீதம் சந்தை வரி விதிக்கப்படுகிறது. அதன்படி தஞ்சை, நாகை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்காச்சோளத்துக்கு செஸ் வரி வசூலிக்கப்பட்டுவருகிறது. மேலும் 23 மாவட்டங்களுக்கு இந்த வரி வசூலிக்க வேளாண் உற்பத்திபொருட்கள் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் பரிதாப நிலையில் உள்ளனர்.

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாநில அரசின் வரி விதிப்பால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை படைப்புழு தாக்குதலுக்கு பூச்சிக்கொல்லி எதுவும் தயாரித்து அரசு வழங்கவில்லை. அரசு விவசாயிகளுக்கு மூன்று ஆண்டுகளாக வழங்கிய உணவு மானியத்தையும் விவசாய உபகரணங்களுக்கு வழங்கிய மானியங்களையும் நிறுத்திவிட்டனர். மீன் உணவு கோழி தீவனம் மற்றும் ஆல்கஹால் தயாரிப்பாளர்கள் மக்காச்சோள உற்பத்தியை நம்பியே இருக்கின்றனர்.

இந்த வரிச் சுமையை வர்த்தகர்கள் விவசாயிகளுக்கு தர வேண்டிய பணத்தில் பிடித்துக் கொள்வர் என்பதால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு பெரிய அளவில் ஏற்படும். இந்த மக்காச்சோளத்துக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரி ரத்து செய்யப்பட வேண்டும். வியாபாரிகள் செஸ் வரி செலுத்த மாலை 5 மணிக்கு மேல் அரசு அலுவலகம் சென்றால் அதிகாரிகள் இருப்பதில்லை என்பதால் இரவில் மக்காசோளம் லோடு ஏற்றிக்கொண்டு வாகனங்கள் செல்ல முடியவில்லை.

ஒரு நாள் தாமதித்தால் விலை இறங்கி விடும் வாய்ப்பு உள்ளது. இந்த இழப்பை விவசாயிகள் வியாபாரிகள் தலையில் தான் கட்டுவர். ஒரு சதவீத வரி என அரசு அறிவித்துவிட்டாலே, அது விவசாயிக்கான விலையில் தான் பிடித்துக் கொள்ளப்படுகிறது. வியாபாரிகள் அந்தத் தொகையை ஒன்றுக்கு இரண்டாக விவசாயிகளிடம் தான் வசூலிப்பர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழுங்காக செயல்பட்டால்தான், விவசாயிக்கு நன்மை. ஆனால் அது நடப்பதில்லை. இடைத்தரகரின்றி மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மக்காச்சோளத்துக்கு விதித்துள்ள சந்தை வரியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.