வால்பாறையில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் செயல்பாடுகளைக் கைவிட வேண்டும்: சீமான்!

வனவளப் பாதுகாப்பு என்கிற பெயரில் வால்பாறையில் வசிக்கும் ஏழை எளிய மக்களை வெளியேற்றும் செயல்பாடுகளைக் கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் பசுமைமாறா வனப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும் தன்னகத்தே தக்க வைத்துள்ள வால்பாறை நிலப்பரப்பு, செழுமை நிலமாகத் திகழ, நெடுங்காலமாக அப்பகுதியில் இயற்கை வளங்களை நேசித்துப் பின்னிப் பிணைந்து வாழ்ந்து வரும் உழைக்கும் மக்களும் காரணமாகும். அம்மக்களைச் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் என்ற பெயரில் நிலமற்றவர்களாக மாற்றி வெளியேற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை வன்மையான கண்டனத்துக்குரியது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டவிரோதச் சுரங்கங்கள் பெருகி வருவதால் அவை வன சரணாலயங்களின் இயற்கை அரணையும், வனவிலங்குகளின் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதிக்கிறது. எனவே சரணாலயங்களின் எல்லையிலிருந்து வான்வழியில் 1.2 கிமீ வரையிலும், தரை வழியில் 10 கி.மீ வரையிலும் எந்த வணிக நிறுவனங்களோ, சொகுசு விடுதிகளோ, மக்களின் வசிப்பிடங்களோ, விவசாய நிலங்களோ இருக்கக்கூடாது என்கிற சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை, எந்த வகையிலும் தொடர்பற்ற பகுதிகளில் செயல்படுத்த நினைப்பது அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும். இதனால் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வால்பாறை உள்ளிட்ட 183 கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறும் கொடுஞ்சூழல் ஏற்பட்டுள்ளது.

1984ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தப்படி இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்ட தாயகம் திரும்பிய மக்கள் தங்கள் உழைப்பைச் செலுத்தி, அட்டைப் பூச்சிகள் மற்றும் வனவிலங்குகள் அச்சுறுத்தலைக் கடந்த நான்கு தலைமுறைகளாகத் தங்கள் குருதியை வியர்வையாகக் கொடுத்து அரசு தேயிலைத் தோட்டத்தை உருவாக்கினர். ஆனால், இன்றுவரை தேயிலைத் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அடிப்படை ஊதியம்கூட வழங்க மறுத்து அவர்களின் உழைப்பை உறிஞ்சி வருகின்றது. இந்நிலையில், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயற்படுத்த முனைவதன் மூலம் அவர்களை மீண்டும் அகதிகளாக்கும் பேரவலம் உருவாகும்.

வால்பாறையில் சுற்றுலா வருவாயை நம்பியே பல ஆயிரக்கணக்கான சிறு குறு வணிகர்களும், வாகன ஓட்டுநர்களும் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் வகையிலும், இத்திட்டத்தின் வழிகாட்டுதலின்படி சுற்றுலா வருவாய் வணிகங்கள் அனைத்தும் பெருமுதலாளிகள் வசம் போய்விடும் என்பதாலும், இத்திட்டம் இயற்கை நலனுக்கும், பல்லுயிர் பாதுகாப்புக்கும் எதிரானதாக அமையும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் – வனவளப் பாதுகாப்பும் பேணி காக்கப்பட வேண்டியது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அதே வேளையில் தன்னார்வ நிறுவனங்களும், பெரும் முதலாளிகளும் பயனடையும் வகையில் உருவாக்கப்படும் நாசகார சட்டங்களுக்காக மண்ணை நம்பி வாழக்கூடிய வேளாண் பெருங்குடிகளையும், அடித்தட்டு வணிகர் பெருமக்களையும், வாகன ஓட்டுநர்களையும் விரட்ட நினைப்பது கொடுங்கோன்மையாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு வால்பாறையைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களை வனநில ஆக்கிரமிப்பாளர்களாகக் கட்டமைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, வாழ்விடத்தை விட்டு வெளியேற்ற வழிவகுக்கும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல நடவடிக்கையையும், அதன் முன்னோட்டமாக மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரையில் பொதுமக்கள் இருசக்கர வாகனம் பயன்படுத்த தடை போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளையும் முழுமையாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.