சென்னை பாண்டி பஜாரில் உள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.
பாண்டி பஜாரில் திலக் தெருவில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் எனும் நிறுவனம் உள்ளது. இங்குதான் தற்போது அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். அது போல் சென்னை எழும்பூரில் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள தமிழக டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், எஸ்என்ஜே நிறுவனத்திலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் மட்டும் 4 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.
அது போல் காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி மற்றும் கரூர் ஆத்தூர் பிரிவு அருகே கோதை நகரில் வசிக்கும் சக்தி மெஸ் சக்திவேல், செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ் சங்கரின் வீடு இருக்கும் கரூர் பழனியப்பா நகரிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை முதல் 5 கார்களில் வந்த 20 பேர் சோதனை நடத்தி வருகிறார்கள். செந்தில் பாலாஜி மீது குறி வைப்பதற்காகவே கரூரில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.