தமிழ்நாட்டு ரயில்களுக்கு மீண்டும் தமிழில் பெயர் வையுங்கள்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் இயங்கும் ரயில்களுக்கு அந்தோத்யா, தேஜஸ் என சமஸ்கிருதப் பெயர்கள் வைப்பதை கைவிட்டு விட்டு, தமிழ் மொழியில் பெயரிடும் பழைய முறையை கடைபிடிக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மொழி மீது பற்று உள்ளதாக பாஜகவினர் கூறுகிறார்கள்.. ஆனால் பிரதமர் மோடி தமது தமிழ் மொழிப் பற்றை எந்த ஒரு செயலிலும் நிரூபித்துக் காட்டவே இல்லையே ஏன்? நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவதற்கு பதிலாக, தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பை கைவிடலாம். தமிழ் மொழிக்கு வெறுமையான பாராட்டுகளை விட, செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கு விட கூடுதல் நிதியை தமிழ் மொழி மேம்பாட்டுக்கு ஒதுக்கலாம்; இந்தி மொழிக்கு இணையான அலுவல் மொழியாக தமிழை மாற்றலாம்.

திருவள்ளுவருக்கு காவிசாயம் பூசி காவிமயமாக்கும் முயற்சிகளை நிறுத்திவிட்டு காலத்தால் அழியாத காவியமான திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கலாம்; மத்திய பட்ஜெட்டில் திருக்குறளை மேற்கோள் காட்டுவதுடன் நிற்காமல் தமிழ்நாட்டுக்கு சிறப்புத் திட்டங்கள், பேரிடர் நிவாரண நிதி, புதிய ரயில்வே திட்டங்களை அறிவித்து உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இயங்கும் ரயில்களுக்கு அந்தோத்யா, தேஜஸ், வந்தே பாரத் என சமஸ்கிருதப் பெயர்களை வைத்து திணிக்காமல் தமிழ்நாட்டு ரயில்களில் செம்மொழி, முத்து நகர், வைகை, மலைக்கோட்டை, திருக்குறள் போன்ற தமிழ்ப் பெயர்களை மட்டுமே வைக்கின்ற நடைமுறைக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு மீண்டும் திரும்ப வேண்டும். இப்படி தமிழ் மீதான பற்றை செயல் மூலமே மத்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.