பள்ளி சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்ல: நடிகை கெளதமி!

பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை, குழந்தைகள் பள்ளி சென்றுவிட்டு பீதியோடு தான் வருகிற நிலை இருக்கிறது எனவும், 10 அமாவாசைக்குள் தேர்தல் வரப் போகிறது, அப்போது அதிமுக ஆட்சி அமைக்கும் என அதிமுக கொள்கைப் பரப்பு செயலாளரும் நடிகையுமான கெளதமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி அதிமுக. சார்பில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் பழனி ஆர்.எப்.ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான நடிகை கவுதமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:-

கடந்த தேர்தலில் தி.மு.க. பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால் தற்போது தமிழ்நாடு எங்கே நிற்கிறது. மாணவர்களின் வளர்ச்சிக்காக ஜெயலலிதா கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் முடக்கிவிட்டார்கள். மு.க.ஸ்டாலின் ஆட்சியில் குழந்தை முதல் முதியோர்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் பள்ளி சென்றுவிட்டு பீதியோடு தான் வருகிற நிலை இருக்கிறது.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில் வசதிகள் எதுவும் இல்லை. ஆனால் அவர்களை போதைப் பொருள், டாஸ்மாக்கில் வியாபாரமாக பயன்படுத்துகிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என வாக்குறுதி கொடுத்து செயல்படுத்தினார். ஆனால் திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, தமிழகத்தில் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என கூறினார்கள். ஆட்சி வந்தபின்பு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டது. விலைவாசி, பால், மின்சார கட்டணம் எல்லாம் ஆகாய அளவுக்கு உயர்ந்துவிட்டது.

10 அமாவாசைக்குள் தேர்தல் வரப் போகிறது. அதற்குள் கண்துடைப்பாக அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஏதாவது செய்து வாக்கு கேட்பார்கள். ஆனால் அவர்களின் செயல்பாடுகளை மறந்துவிடாதீர்கள். பழனியை திருப்பதி போல் மாற்றிக் காட்டுவோம் என ஒரு பொய்யை சொன்னார்கள். ஆனால் முருகப்பெருமான் வாழ்கிற பழனி மலையை சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. கடமையை செய்வதாக சொன்ன மக்கள் பிரதிநிதி எங்கே? அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிற பழனி, கொடைக்கானல் இடையே ரோப்கார் திட்டத்தை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் எதுவும் செய்யவில்லை. எந்த துறையிலும் அரசு சாதிக்கவில்லை. ஆனால் ஊழலில் தான் சிறப்பாக செயல்படுகிறது. எனவே மக்களிடம் மறுபடி வாக்கு கேட்க தகுதி இல்லை. எனவே 5 ஆண்டுகால கொடுமையை மக்கள் மனதில் வைத்திருக்கனும். மக்கள் நன்றாக வாழ எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “அமைதி பூங்காவான தமிழகம் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு அமளி பூங்காவாக உள்ளது. மது, வன்முறை கலாச்சாரம், பாலியல் பிரச்சினை, கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. போதைப்பொருளின் சந்தை களமாக தமிழகம் மாறி மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. ஆனால் போதையின் பாதையில் செல்லாதீர்கள் என முதல்-அமைச்சர் விளம்பரம் செய்து ஒரு விளம்பர ஆட்சியை நடத்துகிறார். ஜெயலலிதாவை எல்லோரும் பாசத்தில் அம்மா என அழைத்தனர். அதுபோல் இவர் அப்பா என அழைக்க விளம்பரம் தேடுகிறார். நல்ல திட்டங்களை செய்திருந்தால் மக்கள் அதை வரவேற்பார்கள். எனவே மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிந்தால் தான் விமோசனம். இதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மாற்றம் தான் தேவை” என்றார்.