பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனின் செயல்பாடுகளை பார்த்திருந்தால், அவரின் தந்தை குமரி ஆனந்தன் வருத்தமடைந்து இருப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக தரப்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கோயம்பேடு பகுதியில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த போலீசார், அனுமதி பெறாமல் கையெழுத்து போராட்டம் நடத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இதன்பின் காவல்துறை – பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் கையெழுத்து பெறுவதை தடுத்ததால் பாஜகவினர் கோஷம் எழுப்ப தொடங்கினர். இதையடுத்து காவல்துறையினரால் தமிழிசை செளந்தரராஜன் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழிசை செளந்தரராஜன் நடந்து கொண்ட நடவடிக்கையை அவர் தந்தை குமரி ஆனந்தன் பார்த்திருந்தால், நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார், துயரமடைந்திருப்பார். இவருக்கு நாம் ஏன் தமிழிசை என்று பெயர் வைத்தோம் என்று மிக மிக வருத்தமடைந்திருப்பார். கையெழுத்து இயக்கம் என்று சொல்லிவிட்டு, வீடு வீடாக சென்று வாங்குவோம் என்கிறார்கள். ஆனால் பாஜகவினர் எந்த இடத்திற்கு சென்று வாங்கினார்கள் என்பதை பார்க்க வேண்டும். தமிழிசையை சுற்றி 10 பாஜகவினரை நிற்க வைத்து கொண்டு ஊடகங்களில் வெளிச்சம் பெற வேண்டும் என்பதால், கையெழுத்து இயக்கத்தை தங்கள் கட்சியினரை வைத்து நடத்தி கொண்டார்.
அதேபோல் காலாவதி என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார். இதனால் காலாவதியானவர் யார் என்ற கேள்வி எழுகிறது. புதுச்சேரியில் காலாவதியானவர், தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவால் காலி செய்யப்பட்டவர் எங்களை பார்த்து காலாவதி என்கிறார். அவரை காலாவதியாக்குவதற்கும், அவர் சார்ந்த இயக்கத்தை காலாவதி ஆக்குவதற்கு தமிழ்நாடு மக்கள் 2026 தேர்தலில் தயாராக இருக்கிறார்கள் என்பதை அக்கா தமிழிசைக்கு தெரியப்படுத்தி கொள்வதாக தெரிவித்துள்ளார்.