சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்கிற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப, இன்று எல்லாத் துறைகளிலும் புதுமை படைத்து, பெண்கள் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி என பல்வேறு நற்பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற பெண்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக, ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில், தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டமற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்பை அள்ளிக் கொடுப்பதில் அன்னையாக, அறிவை அருளும் ஆசிரியையாக, பாசத்தோடு அரவணைக்கும் சகோதரியாக, மனதோடு மனம் கலந்த மனைவியாக, மகளாக, நட்பைக் காட்டும் தோழியாக, தர்மத்தைச் சொல்லும் பாட்டியாக என, வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கின்றவர்கள்தான் பெண்கள்.
‘பெண்கள் இந்நாட்டின் கண்கள்’. பெண்குலம் உயர்வு பெற்றால்தான் உலகம் உயர்வு பெறும். பெண்ணை தாய்மை, இறைமை என்று பெண்ணின் பெருமையைப் போற்றியவர் திரு.வி.க. சங்க காலத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் சிறப்பு பெற்றிருந்தனர் என்பதை சங்க இலக்கியங்களின் வாயிலாக நாம் அறிந்திருக்கிறோம். அந்த வகையில், அவ்வையார், பாரிமகளிர், காவற்பெண்டு, காக்கைபாடினியார் போன்ற பல பெண்பால் புலவர்களும் கல்வியில் சிறந்தவர்களாக, தலைமைப் பண்பு மிக்கவர்களாக சரித்திரச் சாதனை படைத்துள்ளனர்.
தற்போது பெண்கள், கல்வி அறிவு பெற்று ஆட்சித் துறை, தொழில் துறை, அறிவியல், மருத்துவம், சட்டம், காவல், இலக்கியம், கல்வி போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றி வெற்றிநடை போட்டு வருதை நம் கண்களால் காண முடிகிறது. விண்வெளி பொறியியல் படித்து, முனைவர் பட்டமும் பெற்று,
விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா, இந்திய முதல் காவல்துறை ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி, விமான ஓட்டுநர் துர்காபேனர்ஜி, ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த ஆர்த்திஷா, பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி போன்றோரெல்லாம் பெண்ணின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றியவர்கள்.
பெண்ணின் விடுதலையைப் பறைசாற்றியதில் மகாகவி பாரதிக்குப் பெரும் பங்கு உண்டு. பெண்ணின் விடுதலைக்காக அவர் எழுச்சியூட்டும் வகையில் பாடிய பாடல் வரிகளை உள்வாங்கி, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைத் தீட்டி அவற்றையெல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியவர் ஜெயலலிதா. “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற தாரக மந்திரத்தை முழங்கி, தமிழக அரசியல் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த அவரின் தலைமையிலான பொற்கால ஆட்சியில், பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக செயல்படுத்திய திட்டங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
* பெண் சிசுக் கொலையைத் தடுக்க ‘தொட்டில் குழந்தை திட்டம்’.
* பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்.
* அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்.
* பெண் கமாண்டோ படை.
* பெண்களின் பணிச் சுமையைக் குறைத்திட விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம்.
* தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.
* அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்.
* மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினி வழங்கும் திட்டம்.
* உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு.
* பெண் கல்வியை ஊக்குவிக்க ரொக்கப் பரிசு.
* நாட்டிலேயே முதன் முறையாக பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்.
* கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்.
* மகளிர் சுயஉதவிக் குழுத் திட்டம்
* அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்
* பெண் உடல் எடை பரிசோதனைத் திட்டம்
* பெண்களுக்கான மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், மகப்பெறு உதவித் தொகையை 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தியது.
> பெண் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 3 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தியது.
* பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை.
* பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்.
* அம்மாவின் பெயரை இன்ஷியலாகப் பயன்படுத்தலாம்.
* மகளிர் பாதுகாப்பை உறுதி செய்திட ‘காவலன் செயலி’ திட்டம்.
* பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட 13 அம்ச திட்டம்.
* இந்தியாவிலேயே, தமிழக மக்களின் நலன்களுக்காகவும், பெண்களின் நலன்களுக்காகவும் சிறப்பான திட்டங்களை அறிவிப்பதில் முதன்மையாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதாதான் என்பதை நான் இங்கு பெருமையோடு நினைவு கூறுகிறேன். இன்றைக்கு பெண்களே இல்லாத துறை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். இன்றைய பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவும், புரட்சிப் பெண்ணாகவும் விளங்கி வருகின்றார்கள். பெண்ணுரிமை வாழட்டும்! வளரட்டும்! என்ற வாழ்த்துதலோடு, மீண்டும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.