தமிழ்நாட்டில் எப்போதும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழி கொள்கை தான் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறினார்.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதற்காக தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாடுக்கு நிதி வழங்க முடியும் என மத்திய அமைச்சர் அதிரடியாக கூறினார். அவரது மிரட்டல் பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனா். மேலும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் முக ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் இருமொழி கொள்கையே போதும் என கார்த்தி பி.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். ராமநாதபுரத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-
தமிழ்நாட்டிற்கு தமிழ், ஆங்கிலம் போதும். இந்தி தேவையில்லை. தமிழ்நாடு இருமொழி கொள்கையே போதும். மும்மொழி கொள்கை வேண்டும் என்று எந்த கட்சியும் கேட்கவில்லை. பாஜகவை தவிர.. வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலைக்காக தமிழ்நாட்டிற்கு வருகின்றனா். அவ்வாறு வருபவர்கள் யாரும் இலக்கணம், இலக்கியத்தை தெரிந்து படித்துவிட்டு வருவது கிடையாது. அவர்கள் தேவைக்கு ஏற்றார் போல் தமிழை கற்று கொள்கின்றனா். அதேபோல் தான் அங்கு செல்லும் தமிழர்கள், அந்த மாநில மொழிகளையும் கற்று வருகின்றனா். அரசு பள்ளிகளுக்கு வடமாநிலங்களில் இருந்து இந்தி ஆசிரியர்களை மத்திய அரசு அனுப்பும். அப்படி நடந்தால் காந்தி கெட்டவர், கோட்சே நல்லவர் என வரலாறு மாற்றப்படும்.
தொகுதி மறுசீரமைப்பு என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது. 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலே பேசுவதற்கு நேரம் கிடைப்பது கிடையாது. இதில் 800 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வந்தால் என்ன நடக்கும். அதிமுக மற்றும் பாஜக இடையே நேரடி, ரகசிய உறவு இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் தோல்வியை சந்திப்பார்கள். எங்கள் கட்சி சுதந்திர கட்சி. யார் வேண்டுமானாலும் டெல்லி சென்று கட்சி தலைமைய சந்திக்கலாம். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தலைமையிடம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மீது அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.